மாவட்டத்தில் குறு, சிறு தொழில்களில் முதலீடு செய்ய ரூ.500 கோடி இலக்கு


மாவட்டத்தில் குறு, சிறு தொழில்களில் முதலீடு செய்ய ரூ.500 கோடி இலக்கு
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில், குறு, சிறு தொழில்களில் முதலீடு செய்ய ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல், 


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்த கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். உதயகுமார் எம்.பி., வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொறுப்பு) ராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

படித்துவிட்டு வேலை கேட்டு பலர் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வங்கி கணக்கு களில் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால், பணம், சொத்துகள் இல்லாதவர்களும் கைத்தொழில் தொடங்க பல்வேறு திட்டங்கள் உள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் குறு, சிறு தொழில்களில் ரூ.500 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 164 நிறுவனங்கள் ரூ.254 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, 12 பேருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.1 கோடியே 69 லட்சம் கடனுதவியை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் தீனதயாளன், மாவட்ட தொழில் மைய மேலாளர் (கடன் வசதி) ரவிச்சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம், பாலபாரதி மீது வழக்கு தொடரப்போவதாக அறிக்கை வெளியிட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், மேம்பாலத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கான பணம் ஆர்.டி.ஓ.வின் வங்கி கணக்கில் பத்திரமாக உள்ளது. அந்த பணத்தை ஊழல் செய்ததாக ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. பேசுவது தவறு. இழப்பீட்டு தொகையை நில உரிமையாளர்களுக்கு விரைவில் வழங்க முதல்-அமைச்சரிடம் பேசி உள்ளேன் என்றார்.

Next Story