திட்டக்குடி அருகே ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை


திட்டக்குடி அருகே ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது தங்களுக்கு குடிநீர் கேட்டு கற்பூரம் ஏற்றி அவர் வழிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திட்டக்குடி, 

திட்டக்குடியை அடுத்து உள்ளது எரப்பாவூர் ஊராட்சி. இங்குள்ள வடக்கு காலனி பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அந்த பகுதியில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும், எறையூரில் இருந்து வெள்ளாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகளில் போதிய அளவில் நீர் இல்லாததால், அதன் மூலம் வினியோகிக்கப்பட்ட நீர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த தண்ணீரும் கடந்த சில நாட்களாக சரியான முறையில் வழங்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி நல்லூர் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் நேற்று காலை ஒன்று திரண்டனர்.

அங்கிருந்து ஊர்வலமாக சென்று, ஊராட்சி மன்ற அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்து, தடையின்றி குடிநீர் வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால், தங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்று கூறி அங்கு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டு நூதன போராட்டத்தையும் அவர்கள் நடத்தினர்.

இதுபற்றி அறிந்த நல்லூர் ஒன்றிய உதவி ஆணையர் பாபு, ஆவினங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாக, ஒன்றிய உதவி ஆணையர் பாபு தெரிவித்தார். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிடுவதாக கூறி அமைதியாக கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story