கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுமா? போலீஸ் மந்திரி பதில்


கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுமா? போலீஸ் மந்திரி பதில்
x
தினத்தந்தி 30 Dec 2018 5:09 AM IST (Updated: 30 Dec 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி மரணம் குறித்து விசாரணை நடத்தப் படுமா? என்ற கேள்விக்கு போலீஸ் மந்திரி எம்.பி. பட்டீல் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவைச் சேர்ந்தவர் மதுகர் ஷெட்டி. ஐ.பி.எஸ். அதிகாரி. இவர் கர்நாடக லோக் ஆயுக்தா மற்றும் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி இருந்தார். தற்போது ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் பயிற்சி மையத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுகர் ஷெட்டி நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது தெரியவந்துள்ளது.

ஆனால் மதுகர் ஷெட்டியின் மரணத்திற்கு சரியான காரணம் தெரியவில்லை என்றும், அவரது சாவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அதுகுறித்து கர்நாடக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஷோபா எம்.பி. கூறி இருந்தார். இந்த நிலையில், பெங்களூரு எலகங்காவில் நேற்று வைக்கப்பட்டு இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி மதுகர் ஷெட்டியின் உடலுக்கு போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரிடம், ஐ.பி.எஸ். அதிகாரி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து மந்திரி எம்.பி.பட்டீல் கூறியதாவது:-

கர்நாடகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான மதுகர் ஷெட்டி மரணம் அடைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி ஆவார். அவர் மரணம் அடைந்்திருப்பது போலீஸ் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். மதுகர் ஷெட்டியின் மரணம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவ மனையிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மதுகர் ஷெட்டியின் மரணம் இயற்கையானதா?, அவரது மரணத்தில் மர்மம் ஏதும் உள்ளதா? என்பது பற்றி தற்போது எதுவும் சொல்ல முடியாது.

தனியார் மருத்துவமனை நிர்வாகம், மதுகர் ஷெட்டி பன்றி காய்ச்சல் காரணமாக மரணம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் கர்நாடக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்த பின்புதான், அதுபற்றி விசாரணை நடத்த இறுதி முடிவு எடுக்கப்படும். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரியவந்தால் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

Next Story