தாத்தாவுக்காக கல்வி சேவை புரியும் மாணவன்


தாத்தாவுக்காக கல்வி சேவை புரியும் மாணவன்
x
தினத்தந்தி 30 Dec 2018 4:46 PM IST (Updated: 30 Dec 2018 4:46 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் படிக்கும் பள்ளி மாணவர் அறிவியல் கண்காட்சியில் வென்ற பரிசுத்தொகையை கொண்டு தமிழகத்தில் வசிக்கும் தன்னுடைய தாத்தா படித்த பள்ளிக்கூடத்திற்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.

மெரிக்காவில் படிக்கும் பள்ளி மாணவர் அறிவியல் கண்காட்சியில் வென்ற பரிசுத்தொகையை கொண்டு தமிழகத்தில் வசிக்கும் தன்னுடைய தாத்தா படித்த பள்ளிக்கூடத்திற்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். அவருடைய முயற்சியால் அந்த பள்ளியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு இருக்கிறது.

அந்த மாணவர் பெயர் கார்த்திக் ரமேஷ். 16 வயதாகும் அவர் அமெரிக்காவிலுள்ள டென்வர் பகுதியில் பெற்றோருடன் வசிக் கிறார். இவருடைய தாத்தா முத்துராமன், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள தேவியக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர். அங்குள்ள அரசு பள்ளியில் படிப்பை நிறைவு செய்தவர்.

தனது தாத்தா படித்த பள்ளிக்கூடத்தை நேரில் பார்வையிட கார்த்திக் விரும்பினார். சமீபத்தில் தாத்தா வீட்டிற்கு வந்தவர் அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கிறார். அமெரிக்காவில் தான் படித்த பள்ளிக்கூடத்தின் கட்டமைப்பு வசதிகளை ஒப்பிட்டு பார்த்தவர், இங்குள்ள பள்ளியையும் அதற்கு இணையான தரத்துக்கு மேம்படுத்த முடிவு செய்தார். அதற்காக அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.

கார்த்திக் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பள்ளிகள் அளவில் நடந்த சர்வதேச அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றிருக்கிறார். அவருக்கு 3 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த தொகையையும், தான் சேமித்து வைத்திருந்த 3 ஆயிரம் டாலரையும் அறக்கட்டளை நிதியில் சேர்த்துவிட்டார். அந்த தொகையை பள்ளிக்கூட மேம்பாட்டுக்கு செலவிடுவதற்காக தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அவர், சூரிய ஒளி மூலம் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மின் கட்டணத்திற்கு செலவிடும் தொகை மிச்சமாகும் என்று கூறி இருக்கிறார்.

இதையடுத்து அந்த பள்ளியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு அதன் மூலம் மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தில் சில ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ‘‘நான் அமெரிக்காவில் நடைபெறும் கண்காட்சிகளில் தவறாமல் பங்கேற்று அதில் கிடைக்கும் பணத்தில் தொடர்ந்து இங்குள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவேன்’’ என்கிறார், கார்த்திக்.

Next Story