வத்தல்மலை பெரியூரில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்


வத்தல்மலை பெரியூரில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Dec 2018 11:00 PM GMT (Updated: 30 Dec 2018 4:17 PM GMT)

வத்தல்மலை பெரியூரில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை பெரியூரில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா மற்றும் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், உதவி கலெக்டர் சிவனருள், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜமனோகரன், முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கால்நடை மருந்தகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரியில் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்த இந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 433 பயனாளிகளுக்கு ரூ.85 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் நாகராசன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜலேந்திரன், முன்னாள் சர்க்கரை ஆலைத்தலைவர் ரங்கநாதன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் வெங்கடேஸ்வரன் வரவேற்றார்.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 660 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதேபோல் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 434 பயனாளிகளுக்கு ரூ.2.42 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இந்த விழாக்களில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவனருள், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, கோவிந்தசாமி, பழனிசாமி, சிவப்பிரகாசம், வேலுமணி, ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் பூக்கடை ரவி உள்பட முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story