மனநிலை பாதிக்கப்பட்ட தாயை கொன்றுவிட்டு மகன் தற்கொலை ஈமச் சடங்கு செலவுக்காக நண்பருக்கு பணம் அனுப்பிய பரிதாபம்


மனநிலை பாதிக்கப்பட்ட தாயை கொன்றுவிட்டு மகன் தற்கொலை ஈமச் சடங்கு செலவுக்காக நண்பருக்கு பணம் அனுப்பிய பரிதாபம்
x
தினத்தந்தி 31 Dec 2018 5:00 AM IST (Updated: 30 Dec 2018 10:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தேனாம்பேட்டையில் மனநிலை பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஈமச் சடங்கு செலவுக்காக நண்பருக்கு பணமும் அனுப்பி வைத்துள்ளார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் நடேசன் (வயது 65). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். இவரது 2-வது மனைவி சுந்தரவல்லி. இவர்களது ஒரே மகன் விக்னேஸ்வரன் (22). சுந்தரவல்லி மனநிலை பாதிக்கப்பட்டவர். வீட்டில் தானாகவே பேசிக்கொண்டே இருப்பார்.

தனது தாயாரின் நிலை கண்டு விக்னேஸ்வரன் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தார். விக்னேஸ்வரன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு ‘டீ’ சப்ளை செய்துவந்தார். அப்போது அருண்குமார் என்பவருக்கு நண்பர் ஆனார்.

அருண்குமார் பெயருக்கு விக்னேஸ்வரன் ரூ.6,500 பணம் அனுப்பி வைத்திருந்தார். மேலும் செல்போனில் அவருக்கு ஒரு தகவலையும் எஸ்.எம்.எஸ். முறையில் அனுப்பியிருந்தார். ‘எங்கள் வீட்டில் நல்ல காரியம் நடக்கப்போகிறது. அதற்கு தேவையான செலவுக்காக இந்த பணத்தை அனுப்பியுள்ளேன்’, என்று எஸ்.எம்.எஸ். தகவலில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

விக்னேஸ்வரன் தனக்கு ஏன் பணம் அனுப்பினார்? என்று அருண்குமார் குழம்பினார். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று உணர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் விக்னேஸ்வரனின் வீட்டுக்கு அருண்குமார் சென்றார். வீட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த அருண்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

விக்னேஸ்வரன் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது தாயார் சுந்தரவல்லி தரையில் பிணமாக கிடந்தார். அவரது வாயில் இருந்து ரத்தம் வடிந்தது. மேலும் விக்னேஸ்வரன் உருக்கமான கடிதமும் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், ‘எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல’, என்று குறிப்பிட்டிருந்தார்.

தனது தாயாரை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு, விக்னேஸ்வரன் தானும் தற்கொலை செய்திருந்தார். இந்த பரிதாப காட்சியை கண்ட அருண்குமார் அதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

தேனாம்பேட்டை உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், மாதவன் ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிணமாக கிடந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது தாயார் சுந்தரவல்லியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியும், மகனும் இறந்த தகவல் தெரிந்து காவல் பணியில் இருந்த நடேசன் கதறி அழுதபடி வீட்டுக்கு வந்தார். இந்த சோக சம்பவம் நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விக்னேஸ்வரன் தனது தாயாரை கொலை செய்த காட்சியை செல்போனில் வீடியோ படம் எடுத்து, அதை தனது நண்பர் அருண்குமாருக்கு அனுப்பியிருந்தார். தனக்கும், தனது தாயாருக்கு ஈமச் சடங்கு செய்வதற்காக ரூ.6,500 பணத்தை நண்பர் அருண்குமாருக்கு அனுப்பி வைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Next Story