புத்தாண்டு கொண்டாட்டத்தில் ‘பைக் ரேஸ்கள்’ தடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


புத்தாண்டு கொண்டாட்டத்தில் ‘பைக் ரேஸ்கள்’ தடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2018 4:15 AM IST (Updated: 30 Dec 2018 10:45 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடத்தப்படும் ‘பைக் ரேஸ்’கள் தடுக்கப்படுமா? அதனால் ஏற்படும் விபத்துகள் குறைக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை,

ஆங்கில ஆண்டான 2018 இன்றுடன் முடிவடைந்து, புதிய ஆண்டான 2019 நாளை (ஜனவரி 1-ந் தேதி) இனிதே ஆரம்பமாக உள்ளது. புத்தாண்டு என்றாலே அனைவரின் மனதிலும் ஒருவிதமான பூரிப்பு ஏற்பட்டு புத்தாண்டை வரவேற்பதில் ஆர்வமாக இருப்பார்கள்.

இதற்காக மெரினா கடற்கரையில் இன்று இரவே ஏராளமான பொதுமக்கள் குவியத் தொடங்கி விடுவார்கள். சாந்தோம் சர்ச் போன்ற தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.

மேலும் பல இந்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். மெரினா கடற்கரையில் கூடுபவர்கள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, பலூன்கள் பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். மேலும் தங்கள் நண்பர்களுக்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள்.

இது தவிர, சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு புத்தாண்டு கொண்டாடுபவர்கள் கேளிக்கை நடனங்களில் ஈடுபடுவது வழக்கம்.

இத்தகைய கொண்டாட்டங்கள் ஒருபக்கம் நடக்க, ‘இளங்கன்று பயம் அறியாது’ என்பதற்கு ஏற்ப இளைஞர்கள் பலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் ‘வீலிங்’ செய்வது, ‘சேஸிங்’ செய்வது, மோட்டார் சைக்கிளின் ‘ஸ்டேண்டை’ தரையில் படும்படி அழுத்தி தீப்பொறி வர வைப்பது, மோட்டார் சைக்கிளில் உள்ள ‘சைலன்சரை’ துளையிட்டு அல்லது அகற்றிவிட்டு அதிக அளவில் ஒலி எழுப்புதல் என பல்வேறு வகைகளில் தங்களது சாகசங்களை செய்வார்கள். இதற்கு அவர்கள் பெரிதும் விரும்பி பயன்படுத்தும் சாலை மெரினா கடற்கரை சாலை தான்.

அதுவும், புத்தாண்டை வரவேற்க குவிந்து இருக்கும் மக்கள் கூட்டதுக்கு இடையே இது போன்ற சாகசங்கள் நடைபெறும். இதற்காக போலீசார் பல்வேறு வகைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி இருந்தாலும் அதையும் மீறி இதுபோன்ற ‘பைக் ரேஸ்’கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மேம்பாலம் ஒன்றில் வாகனங்கள் செல்வதை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ‘பேரிகார்டை’ பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் இழுத்து சென்றதுடன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர்கள் போலீசாரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டன.

இது போன்ற ‘பைக் ரேஸ்’களில் ஈடுபடுவதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். பெரம்பூர், மூலக்கடை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் இளைஞர்கள் பலர் தங்கள் மோட்டார் சைக்கிளின் சைலன்சர்களை அகற்றிவிட்டு அதிக சப்தத்துடன் இரவு நேரத்தில் சாலைகளில் பயிற்சி எடுப்பதை பார்க்க முடிகிறது. இவர்கள் புத்தாண்டு தினத்தன்று தங்கள் சாகசங்களை மேற்கொள்வார்கள்.

இது போன்ற சாகசங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ‘பைக் ரேஸ்’கள் கட்டுப்படுத்தப்பட்டு விபத்துகள் குறைக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், இன்று இரவு நேரத்தில் சாகச பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து புத்தாண்டு முடிந்த பின்னர் மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தால் ‘பைக் ரேஸ்’ கட்டுப்படுத்தப்பட்டு, விபத்துகள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Next Story