ஓசூரில் நடுரோட்டில் கார் கவிழ்ந்தது சினிமா டான்ஸ் மாஸ்டர் உள்பட 2 பேர் உயிர் தப்பினர்
ஓசூரில் நடுரோட்டில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சினிமா டான்ஸ் மாஸ்டர் உள்பட 2 பேர் உயிர் தப்பினர்.
ஓசூர்,
ஈரோட்டை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ்சரவணப்பிரியன்(வயது 32). இவர் சென்னையில் சினிமா டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அவர் தனது காரில் சென்னையை சேர்ந்த தீபா(29) என்ற பெண் நண்பருடன் பெங்களூரு நோக்கி சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்கா அருகே கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சரவணப்பிரியன் மற்றும் தீபா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சாலையில் நடந்த இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினார்கள். கார் நடுரோட்டில் கவிழ்ந்ததையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
Related Tags :
Next Story