நாமக்கல் உழவர்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது
நாமக்கல் மாவட்டத்தில் வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து உள்ளதாக உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் மற்றும் மோகனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று ரூ.20 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் மற்றும் பழவகைகள் விற்பனையானது. 67 ஆயிரத்து 800 கிலோ காய்கறிகளும், 12 ஆயிரத்து 700 கிலோ பழ வகைகளும் விற்பனை செய்யப் பட்டது.
695 விவசாயிகள் உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்திருந்த காய்கறிகள் மற்றும் பழங்களை 20 ஆயிரத்து 293 வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர்.
இதற்கிடையே சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை குறைந்து வருவதாக உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர். அதேபோல் பிற மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக விலை குறைந்து இருப்பதாகவும், அதன் காரணமாக இங்கேயும் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், நேற்று ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் ரூ.26-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story