மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது நீர்த்தேக்க பகுதிகளில் விவசாய பணிகள் தொடக்கம் காட்டுப்பன்றிகளை விரட்ட கோரிக்கை
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், நீர்த்தேக்க பகுதிகளில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். மேலும் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.
கொளத்தூர்,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போது நீர்த்தேக்க பகுதிகளில் விவசாய பணிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பண்ண வாடி, சேத்துக்குளி கோட்டையூர், மூலக்காடு ஆகிய இடங்களில் முழுவடை விவசாயம் செய்யப்படுகிறது. இதற்காக இந்த நீர்த்தேக்க பகுதிகளில் உழவு செய்யப்பட்டு எள், கம்பு, சோளம் போன்ற தானிய பயிர்களும், பருத்தி, புகையிலை போன்ற பணப்பயிர்களும், வெண்டைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பியதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் முழுவடை விவசாயம் முற்றிலுமாக நின்று போனது. இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வற்றி விட்டன. இதை பயன்படுத்தி அங்குள்ள விளைநிலங்களில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
முழுவடை விவசாயத்திற்காக நீர்த்தேக்க பகுதிகளை உழுது, முதல் போக விவசாயமாக நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. கொளத்தூரை அடுத்த பெருமாள் கோவில் நத்தம் பகுதியில் முழுவடை விவசாய நிலத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பரண் அமைத்து காட்டுப்பன்றிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சில விவசாயிகள் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளை பட்டாசு வெடித்தும் விரட்டி வருகின்றனர். எனவே விளைநிலங்களில் சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மேட்டூர் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story