2 பேரை கடத்தி தாக்கிய விவகாரம்: சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் கைது
நாமக்கல்லை சேர்ந்த 2 பேரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரிடம் சக்திவேல், எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கி தருவதற்காக ரூ.60 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான பொருளை தராமல் பூபதி இழுத்தடித்து வந்தார்.
இந்நிலையில் சக்திவேலிடம் பூபதி 2 நாட்களுக்கு முன்பு, தன்னிடம் 9 செல்போன் பார்சல் இருக்கிறது. இதை சேலத்தில் உள்ள தனது நண்பர் கரணிடம் (27), கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். பார்சலை பெற்றுக்கொண்ட சக்திவேல், தன் நண்பர் பிரபாகரனை அழைத்துக்கொண்டு சேலம் கொண்டலாம்பட்டி சென்றார்.
பூபதி தனது நண்பர் கரணிடம் ரூ.1½ லட்சத்தை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இருந்தார். இதனால் அவர் கரணை செல்போனில் தொடர்பு கொண்டு, சக்திவேல் என்பவர் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 9 செல்போன்களை பார்சலில் கொண்டு வருகிறார். அதை கடனுக்காக பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
சக்திவேல், பிரபாகரன் ஆகியோர் கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு கரணை அழைத்துள்ளனர். அதன்படி கரண் உள்பட 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர் கள் சக்திவேலிடம் செல்போன் பார்சலை வாங்கி பிரித்து பார்த்தனர். அதில் சாக்லெட் இருப்பதை கண்டு கரண் அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய நண்பர்களை வரவழைத்து சக்திவேல், பிரபாகரன் ஆகியோரை கடத்தி ஒரு குடோனில் அடைத்து வைத்து தாக்கினார்.
கடத்தல் கும்பலில் இருந்த ஒருவர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சுப்பிரமணிக்கு போன் செய்துள்ளார். அவர் சீருடையில் அங்கு சென்று சக்திவேல், பிரபாகரன் ஆகியோரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர்களது ஏ.டி.எம். கார்டை அந்த கும்பல் பறித்தனர். மேலும் அவர்களின் பெற்றோருக்கு போன் செய்து உங்கள் மகன்களை கடத்தி வைத்து இருக்கிறோம். 2 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.50 ஆயிரம் போடும்படி மிரட்டினர். இதையடுத்து 2 பேரின் வங்கி கணக்கிற்கு ரூ.41 ஆயிரம் மட்டுமே வந்துள்ளது. ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்துக்கொண்டு 2 பேரையும் விட்டு, விட்டு 7 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கடத்தலில் ஈடுபட்ட கரண், முகமதுபாஷா (30), அப்சரத் அலி (39), ஆசீப் (27), அப்துல்லத்தீப் (36), சரவணன் (27), இம்ரான் (30) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சக்திவேல், பிரபாகரன் ஆகியோரை மிரட்டியதுடன், கடத்தல் கும்பலிடம் ரூ.10 ஆயிரம் பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியும் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story