பொங்கல் பண்டிகையையொட்டி இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான கரும்புகள்


பொங்கல் பண்டிகையையொட்டி இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான கரும்புகள்
x
தினத்தந்தி 30 Dec 2018 10:45 PM GMT (Updated: 30 Dec 2018 10:36 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

அன்னவாசல்,

தமிழர் திருநாளாம் பொங்கல் என்றாலே தித்திக்கும் செங்கரும்புகளின் சுவையை நினைத்து பார்க்காதவர்கள் இருக்க முடியாது. இத்தகைய கரும்புகள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி, தாண்றீஸ்வரம், முக்கண்ணாமலைப்பட்டி, பெருஞ்சுனை, சிறுஞ்சுனை, செல்லுகுடி, குருக்களையாப்பட்டி, எல்லைப்பட்டி, நார்த்தாமலை, சித்துப்பட்டி, கூத்தினிப்பட்டி, இரும்பாளி, மேலூர், காவேரிநகர், கீழக்குறிச்சி, வயலோகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் அனைத்தும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் சாய்ந்த கரும்புகளை நினைத்து வேதனை அடைந்தனர். இருப்பினும் சாய்ந்த கரும்புகளை எப்படியாவது பொங்கல் வரை காப்பாற்றிட வேண்டும் என நினைத்து கரும்புகளை நிமிர்த்து வேர் பகுதியை மண்ணில் அனைத்து கரும்புகளை ஒன்று சேர்த்து நிமிர்த்து இணைத்து கட்டியுள்ளனர்.

விலை

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாததாலும் வேலையாட்கள் பற்றாக்குறையாலும் கரும்புகளின் விலை உயர தொடங்கியுள்ளது. மேலும் புயலின் காரணமாக கரும்பின் வளர்ச்சியும் இந்தாண்டு சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு கரும்பின் விலை ரூ. 25 முதல் ரூ.30 வரையிலும், பத்து கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.200 முதல் ரூ.250 வரையிலும் ஒரு சில இடங்களில் விவசாயிகள் விற்க தொடங்கியுள்ளனர். இன்னும் அறுவடை பணி அதிகமாக தொடங்கும் போது, இதன் விலை இன்னும் குறைய தொடங்க வாய்ப்பு உள்ளது.

அறுவடைக்கு தயார்

சில இடங்களில் தற்போது விவசாயிகள் சாலையோரங்களிலும், வயலிலேயே கரும்புகளை வைத்து சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் அயராத உழைப்பால் மீண்டும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள கரும்புகள் பொங்கல் அறுவடைக்கு தயாராக உள்ளன.

கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா?

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

கரும்பு ஓராண்டு கால பயிர், நாங்கள் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்தவுடன் சாகுபடி செய்தோம். தற்போது அவை சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை போன்றவையால் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கு முன்பே காற்றில் சாய்ந்ததால் கரும்பின் வளர்ச்சியும் சற்று குறைந்துள்ளது. இதனால் கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே கரும்பை கடந்த ஆண்டை விட கூடுதல் விலைக்கு விற்றால்தான் ஈடுகட்ட முடியும். மேலும் விவசாயிகள் அனைவரும் பொங்கலுக்கு 2 அல்லது 3 நாட்கள் உள்ள நிலையில் தான் மொத்தமாக அறுவடை செய்வோம் என்றார். 

Next Story