முன்னேற துடிக்கும் மாவட்ட பட்டியலில் முதலிடம் பெற்ற விருதுநகருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; மத்திய அரசுக்கு கோரிக்கை
தேசிய அளவில் முன்னேற துடிக்கும் மாவட்ட தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள விருதுநகர் மாவட்டத்திற்கு திட்டப்பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தேசிய அளவில் 115 மாவட்டங்கள் முன்னேற துடிக்கும் மாவட்டங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, விவசாயம், தனித்திறன் வளர்ச்சி, நிதிமேலாண்மை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாத கால ஆய்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்று அதற்கான விருதையும் பெற்றுள்ளது. இந்த விருது கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக கிடைத்துள்ளது.
கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பணிகளுக்காக விருது வழங்கப்பட்டு இருந்தாலும் இத்துறைகளில் மாவட்டம் முழுவதும், குறிப்பாக பின்தங்கிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற கூடுதல் நிதி தேவையாக உள்ளது. இருக்கும் நிதி ஆதாரத்தை கொண்டு மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்தாலும் எதிர்பார்க்கும் இலக்கினை அடைய கூடுதல் நிதி ஒதுக்கீடு அத்தியாவசியமாகிறது. இந்த மாவட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த முறை ஆய்வுக்கு வந்திருந்த போது திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து பிரதமரிடம் பேசி கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.
இதேபோன்று பெரும்பாலும் மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள விருதுநகர் மாவட்டத்தில் தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம் மேம்படுவதற்கு கண்மாய்கள், வரத்துக்கால்வாய்கள் மராமத்து செய்யப்படவேண்டிய நிலை உள்ளது. தற்போது உள்ள நிலையில் மழை பெய்தாலும் கண்மாய்களிலும், அணைகளிலும் முழு கொள்ளளவிற்கு நீரை தேக்கிவைக்க முடியாத நிலை இருந்துவருகிறது. விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் தொடக்கம் முதலே ஷட்டர் பழுதால் நீர்கசிவு ஏற்பட்டு அணையில் நீரை தேக்கிவைக்க முடியவில்லை. மத்திய அரசின் ராஜீவ்காந்தி நீர்மேலாண்மை நிதியுதவியுடன் கட்டப்பட்ட இருக்கன்குடி அணை வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பாலும், நீர்பிடிப்பு பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பாலும் நீரை தேக்கிவைக்க முடியாத நிலையில் உள்ளது. கோல்வார் பட்டி அணை பகுதிகளிலும் மராமத்து தேவைப்படும் நிலையில் உள்ளது. விவசாயம் மேம்பட நீர்நிலைகளை மராமத்து செய்ய அவசியம் உள்ள நிலையில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மராமத்து பணிகளை மேற்கொண்டால் தான் விவசாயத்தை மேம்படுத்த முடியும்.
விருதுநகர் பின்தங்கிய மாவட்டமாக கண்டறியப்பட்டதற்கு காரணமே திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லாததும் ஒன்றாகும். இதேபோன்று அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை இருந்துவருகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனையான விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்படவேண்டிய நிலையும் உள்ளது. எனவே சுகாதாரம் மேம்படவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு அத்தியாவசிய தேவையாக உள்ளது.
பல கிராமப்புற பள்ளிகளில் போதிய வகுப்பறைகள், கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர், துப்புறவு பணியாளர் நியமனம் ஆகியவை இல்லாத நிலையில் மாணவ–மாணவியருக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், அவர்களின் கற்றலின் தரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே அவற்றை ஏற்படுத்தி தர வேண்டும். பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படாத நிலையில், நகர் புறங்களில் குறைந்த பட்சம் 10 நாட்கள் இடைவெளியில்தான் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது. இதுதவிர கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கெல்லாம் போதிய நிதி ஒதுக்கீடு செய்தால்தான் விருதுநகர் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை 3 ஆண்டு கால அவகாசத்தில் எட்ட முடியும்.
எனவே திட்டப்பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரியான பிரவீன்குமார், மாவட்டத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதியை மதிப்பீடு செய்து அதனை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டியது அவசியமாகும். நிதி பற்றாக்குறையை வைத்துக்கொண்டு திட்டப்பணிகளை முழுவீச்சில் செய்வது என்பது இயலாத காரியமாகும். எனவே தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கி திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.