பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் 8–ந்தேதி உண்ணாவிரதம்


பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் 8–ந்தேதி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 31 Dec 2018 5:15 AM IST (Updated: 31 Dec 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகாசியில் வருகிற 8–ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடங்கிவைக்கிறார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளும் குறிப்பிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவு காரணமாக கடந்த 1½ மாதங்களாக உற்பத்தியில் ஈடுபட முடியாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய–மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் சிவகாசி நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நகர தலைவர் குமரன், வக்கீல் குப்பையாண்டி, இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், அமைப்புசாரா தொழிற்சங்க (காங்கிரஸ்) மாவட்ட தலைவர் மல்லீஸ்வரன், இக்பால், முத்துமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய–மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகாசியில் வருகிற 8–ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மீனாட்சிசுந்தர் கூறும்போது, இந்த போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தொடங்கி வைக்கிறார். இதில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன்மவுலானா, பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜாசொக்கர், மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் கலந்துகொள்கின்றனர். இற்கான ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்றார்.


Next Story