பெங்களூருவில் வசிக்கும் மனைவிக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘முத்தலாக்’ கொடுத்த அமெரிக்க டாக்டர் மத்திய மந்திரியிடம், பெண்ணின் குடும்பத்தினர் முறையீடு


பெங்களூருவில் வசிக்கும் மனைவிக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘முத்தலாக்’ கொடுத்த அமெரிக்க டாக்டர் மத்திய மந்திரியிடம், பெண்ணின் குடும்பத்தினர் முறையீடு
x
தினத்தந்தி 31 Dec 2018 4:43 AM IST (Updated: 31 Dec 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

‘முத்தலாக்’ முறையை தடை செய்யும் வகையில் மக்களவையில் சிறப்பு மசோதா நிறைவேறி உள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, டாக்டரானஅவருடைய கணவர்அமெரிக்காவில் இருந்தபடி ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘முத்தலாக்’ கொடுத்துள்ளார்.

பெங்களூரு,

இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் முறையிட்டு அவருடைய உதவியை நாடியுள்ளனர்.

முஸ்லிம் மக்கள் பின்பற்றும் ‘முத்தலாக்‌’ விவாகரத்து முறையை தடை செய்யும் வகையில் மத்திய அரசின் சிறப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த வாரம் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரு பெண்ணுக்கு கணவரான அமெரிக்க டாக்டர் ஒருவர் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘முத்தலாக்’ கூறியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூருவில் வசித்து வருபவர் ரேஷ்மா. இவருடைய கணவர் ஜாவேத். இவர்கள் 2 பேருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். டாக்டரான ஜாவேத், அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். ரேஷ்மா பெங்களூருவில் உள்ள தனது தாயின் வீட்டில் இருக்கிறார்.

இந்த நிலையில் ஜாவேத் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ரேஷ்மாவிடம் ‘முத்தலாக்’ கூறியுள்ளார். மேலும், ‘பார்க்க அழகாக இல்லை, உனக்கு வயது அதிகமாக ஆகிவிட்டது. இதனால் உன்னுடன் வாழ பிடிக்கவில்லை’ என்று ‘முத்தலாக்’ காரணத்தை ரேஷ்மாவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ரேஷ்மா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை மந்திரி மேனகா காந்தியின் உதவியை நாடியுள்ளனர். இதுபற்றி அறிந்த மத்திய மந்திரி மேனகா காந்தி சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளார். இதுபற்றி மேனகா காந்தி கூறுகையில், ‘பெங்களூரு பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்’ என்றார்.

Next Story