வெவ்வேறு பகுதிகளில், மூதாட்டிகளிடம் 12½ பவுன் நகை பறிப்பு
வெவ்வேறு பகுதிகளில் மூதாட்டிகளிடம் 12½ பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜவேலு. இவரது மனைவி சரஸ்வதி(வயது 62). நேற்று காலை ராஜவேலு, மனைவி யுடன் மோட்டார் சைக்கிளில் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார். லட்சுமிபுரம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்தனர்.
அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சரஸ்வதி கீழே விழுந்தார். இந்தநிலையில் மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இதனிடையே காயம் அடைந்த சரஸ்வதி தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தெப்பம்பட்டியை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மனைவி சிட்டம்மாள்(60). இவர் பெரியகுளம், ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள தனது அக்கா செல்லம்மாள் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை சிட்டம்மாள் வாசல் தெளித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் சிட்டம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story