ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் திடீர் ஆய்வு


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Dec 2018 4:30 AM IST (Updated: 31 Dec 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அமைச்சர் மணிகண்டன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஒவ்வொரு வார்டாக சென்ற அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து முக்கிய பதிவேடுகளையும் பார்வையிட்டார். பின்பு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரத்தம் மற்றும் அதுதொடர்பான பதிவேடுகளை தீவிரமாக ஆய்வு செய்தார்.

ரத்த வங்கியில் உள்ள பரிசோதனையாளர்கள் மற்றும் செவிலியர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி மருத்துக்கல்லூரிக்கு இணையான ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு தேவையானஅனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரிவுகளுக்கும் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் 1000–க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். இங்கு பொதுமக்களுக்கு அறுவை சிகிச்சை, விபத்து போன்ற அவசர கால சூழ்நிலையில் தேவைப்படும் ரத்தத்தினை வழங்க ஏதுவாக 600 யூனிட் சேமிப்பு வசதி கொண்ட ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது.

ரத்த வங்கியில் பராமரிக்கப்பட்டு வரும் ரத்த தானம் செய்பவர் குறித்த பதிவேடு, ரத்த தானம் பெறப்பட்ட நாள், ரத்த வகை ஆகிய விவரங்கள் அடங்கிய பதிவேடு, ரத்தத்தில் நோய் தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்ததற்கான பதிவேடு, அவசர தேவையின் அடிப்படையில் ரத்த வங்கியில் இருந்து சிகிச்சைக்காக வழங்கப்பட்ட ரத்தம், நோயாளி குறித்த பதிவேடு என அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டேன். நானும் ஒரு டாக்டர் என்பதால் இந்த விவரங்களை முழுமையாக ஆய்வு செய்தேன்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரித்து வருகின்றனர். ரத்த வங்கிகளின் மூலமாக ரத்த தானம் பெறும்போதும், தேவையின் அடிப்படையில் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கும்போதும் உரிய விதிமுறைகளை பின்பற்றி விழிப்புடன் பணியாற்ற உத்தரவிடப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.


Next Story