வசாய் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 14 பேர் கைது 2 படகுகள் பறிமுதல்


வசாய் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 14 பேர் கைது 2 படகுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 Dec 2018 5:03 AM IST (Updated: 31 Dec 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

வசாய் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவா்களிடம் இருந்து 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

தகானு கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் காலை வசாய், பஞ்சு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 6 படகுகள் சுற்றிக்கொண்டு இருந்தன. இதனைக் கண்ட கடற்படையினர் அந்த படகுகள் அருகே சென்றனர்.

அப்போது கடற்படையினர் வருவதை கண்டு படகுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வேகமாக சென்றனர். இதையடுத்து கடலோர காவல்படையினர் அந்த படகுகளை துரத்தி சென்றனர். இதில் 2 படகுகள் மடக்கி பிடிக்கப்பட்டது. மற்ற 4 படகுகள் தப்பி சென்றன.

ஒரு படகில் 7 பேர் வீதம் என 2 படகுகளிலும் இருந்து 14 பேரை பிடித்த கடற்படையினர் அவர்களை வசாய் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் கடலில் சட்டவிரோதமாக மணல் அள்ளியது தெரியவந்தது. மேலும் அவர்கள் பதிவுஎண் உள்ளிட்ட எந்த உரிய ஆவணங்களும் இல்லாத படகுகளில் சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் பிடிபட்ட 14 பேரும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறினர். ஆனால் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இதுகுறித்து வசாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story