கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி வனப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வரும் யானைகள்


கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி வனப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வரும் யானைகள்
x
தினத்தந்தி 31 Dec 2018 12:16 AM GMT (Updated: 31 Dec 2018 12:16 AM GMT)

கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி வனப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக யானைகள் வருகின்றன.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், டி.என்.பாளையம், கேர்மாளம், தலமலை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இதில் தாளவாடி வனச்சரகமானது கர்நாடக எல்லையில் அமைந்து உள்ளது.

இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி தாளவாடி வனப்பகுதிக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் தமிழக– கர்நாடக எல்லையில் தாளவாடிக்கு அருகே உள்ள அருள்வாடி, எத்திக்கட்டை, மல்லன்குழி பகுதியில் கடந்த 2 நாட்களாக சுற்றி வருகிறது.

இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் அருள்வாடி, எத்திக்கட்டை, மல்லன்குழி ஆகிய பகுதிக்கு விரைந்து சென்று பல்வேறு குழுக்களாக பிரிந்து யானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘கர்நாடக மாநில வனப்பகுதியில் ஏராளமான யானைகள் தாளவாடி வனப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வர தொடங்கி உள்ளன. தற்போது தாளவாடி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்துவிடாதவாறு அகழி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


Next Story