முத்தலாக் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பேட்டி


முத்தலாக் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2018 5:48 AM IST (Updated: 31 Dec 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

முத்தலாக் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பவானியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பவானி,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க விழா ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கலந்து கொண்டார். விழாவின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் சட்ட பிரச்சினை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது ஆகும். சுப்ரீம் கோர்ட்டு முத்தலாக் பிரச்சினை குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்தபோது, மத்திய அரசு திடீரென இதற்காக ஒரு தனி சட்டம் அமைப்பது முற்றிலும் தவறானது.

முஸ்லிம் மக்களை பொறுத்தவரை மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரிடம் ஒப்புதல் பெற்று மணவாழ்வு ஒப்பந்த அடிப்படையில் தான் திருமணங்கள் நடைபெற்று வருகிறது. அவர்கள் இப்போது மட்டுமல்ல இறைவன் கூற்று படி மறுமையிலும் இறந்த பின்னும் கணவன் மனைவியாக இருக்க வேண்டும் என்று அந்த திருமண ஒப்பந்தம் முடிக்கப்படுகிறது.

ஆனால் இவ்வாறு நடக்கிற திருமணங்களில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிவு ஏற்படுகிறது. அது முறைப்படி பேசி தீர்த்து வைக்கப்படுகிறது. ஒரு சில பிரச்சினைகளில் கோர்ட்டுக்கு சென்று தீர்வு காண்பது வழக்கம்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டே முத்தலாக் பிரச்சினையை மறுத்த போதும் மத்திய அரசு சட்டம் இயற்றி மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாது. மத பிரச்சினைகளில் கோர்ட்டு தலையிடக்கூடாது. அவ்வாறு தலையிடுவது என்பது மத நம்பிக்கைக்கும், பாரம்பரியத்திற்கும் விரோதமானது. வழிபாட்டு முறைகளை கோர்ட்டு மாற்றக்கூடாது.

சபரிமலைக்கு செல்ல பெண்களை அனுமதிப்பது என்பதும் தவறான கொள்கையாகும். பாரம்பரியமாக நடைபெற்று வந்த முறைகளை 3 நீதிபதிகள் அமர்ந்து முடிவு செய்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.

மேலும் தமிழகத்தில் அ.ம.மு.க.வும் அ.தி.மு.க.வும் தற்போது நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றன. தேர்தல் வரும் காலகட்டத்தில் 2 அணிகளும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டு கண்டிப்பாக தோற்கும் நிலை உருவாகும். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாரதீய ஜனதா படு தோல்வியை சந்தித்ததற்கு ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பே முக்கிய காரணமாகும். மத்தியிலும், மாநிலத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காதர் மொகிதீனுடன் கட்சியின் மாநில பிரதிநிதி முகமது தாஜ் மொகிதீன், ஈரோடு மாவட்ட தலைவர் நூர் முகம்மது, மாவட்ட செயலாளர் முகமது ஆரிப், நகரத் தலைவர் சவுன் சாகிப் ஆகியோர் இருந்தனர்.

Next Story