உயர்மின் கோபுரங்களுக்கு எதிர்ப்பு: மண்ணை வாரி இறைத்து போராட்டத்தை நிறைவுசெய்த விவசாயிகள்
உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், நேற்று மண்ணை வாரி இறைத்து போராட்டத்தை நிறைவு செய்தார்கள்.
ஈரோடு,
விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட 8 மாவட்டங்களில் விவசாயிகள் கடந்த 17–ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஈரோடு அருகே மூலக்கரை பகுதியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களுடைய போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் 14–வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்தது. இதேபோல் 8–வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பங்கேற்றனர். அவர்கள் மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.
உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தினமும் ஒரு நூதன போராட்டத்தை நடத்தி வந்தனர். அதன்படி மண்ணை வாரி இறைத்து விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு மண்ணை வாரி இறைத்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் வடிவேல், விவசாயிகளுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி கூறியதாவது:–
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் உள்பட பொதுமக்கள் பலர் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இந்த நிலையில் காத்திருப்பு போராட்டத்தை நிறுத்தி வைத்து உள்ளோம். மேலும், அடுத்தகட்ட போராட்டமாக வருகிற 3–ந் தேதி முதல் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.