ஓசூரில் சாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு கி.வீரமணி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு


ஓசூரில் சாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு கி.வீரமணி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:00 AM IST (Updated: 31 Dec 2018 10:32 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் சாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கி.வீரமணி, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், திராவிடர் கழகம் சார்பில் சாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு, ராம்நகர் அண்ணா சிலையருகில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- வெறும் அரசியலுக்காக, பதவிக்காக, ஓட்டுக்காக, கூட்டணிக்காக இல்லை நமது இயக்கம். சாதிவெறி வேரறுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரது நோக்கம்.

மீண்டும் ஆணவ கொலைகள் நடந்து விடக்கூடாது. ஆணவ கொலைகளை தடுக்க, நாங்கள் தற்கொலைப்படையாக மாறவும் தயார். ஜனவரி 24-ந் தேதி, தி.க. சார்பில், மனுதர்மம் எரிப்பு போராட்டம் நடத்தப்படும். இதில், ஒத்த கருத்துடைய அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும். இதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:- இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதரித்து, வரவேற்று முன்மொழிகிறது. சாதி, மத மோதல்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்த காவல்துறையில் தனி உளவு பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும். வருகிற 23-ந் தேதி, திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா பேசியதாவது:- முன்பு நல்ல நோக்கத்துடன் சாதி சங்கங்கள் தோன்றின. ஆனால் இன்றுள்ள சாதி சங்கங்கள் பிற சாதியிடம் வெறுப்பு காட்டுகின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இதை நோக்கிய பயணம் நமக்கு வந்தாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 17-வது பிரிவில் இடம் பெற்றுள்ள தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்கு பதிலாக, சாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சாதி பெயரற்றவர்களாக அறிவித்து, குறிப்பிட்ட சதவீதத்தில் அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ம.தி.மு.க. பொருளாளர் கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கோபிநாத், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. முருகன், முன்னாள் தளி எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன், ஓசூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.க. மாவட்ட தலைவர் மதிமணியன் வரவேற்று பேசினார். முடிவில், மாவட்ட செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.

Next Story