உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி காஞ்சீபுரம், திருவள்ளூரில் தொழில் முதலீடு வாய்ப்பு விளக்க கூட்டம் அமைச்சர் பென்ஜமின் பங்கேற்பு


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி காஞ்சீபுரம், திருவள்ளூரில் தொழில் முதலீடு வாய்ப்பு விளக்க கூட்டம் அமைச்சர் பென்ஜமின் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:00 AM IST (Updated: 31 Dec 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி காஞ்சீபுரம், திருவள்ளூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டார்.

காஞ்சீபுரம்,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட தொழில் துறையின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் 2-வது மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.

இதையொட்டி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் அந்த மாவட்டங்களில் உள்ள தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து விளக்க கூட்டங்கள் நடைபெற்றது. இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டார்.

காஞ்சீபுரத்தில் நடந்த விளக்க கூட்டத்தில் 15 நிறுவனங்களுக்கு ரூ.69.11 கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், 7 பேருக்கு ரூ.21 லட்சத்தில் தொழில் புரிய ரூ.5.25 லட்சம் மானியமும், ஒரு பயனாளிக்கு தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வங்கி கடனுதவி உள்ளிட்டவைகளையும் அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்.

அப்போது அமைச்சர் பென்ஜமின் கூறும்போது, “காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு மட்டும் தொழில் முதலீடாக ரூ.3 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.1,761 கோடி முடிவாகி உள்ளது. விரைவில் ரூ.3 ஆயிரம் கோடி இலக்கை முதலீட்டாளர்களின் உதவியோடு அடைய உள்ளோம்” என்றார்.

இதில் தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் டி.பி.ராஜேஷ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், காஞ்சீபுரம் எம்.பி. கே.மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி, மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் நடந்த கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி., பொன்னேரி எம்.எல்.ஏ.வும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரவி, திட்ட மேலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர், 23 பேருக்கு ரூ.150.12 கோடியில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வேலைவாய்ப்பற்ற 16 பேருக்கு கடனுதவி, நீட்ஸ் வங்கி கடன் திட்டத்துக்கு ரூ.1.18 கோடியும், மேலும் 6 பேருக்கு ரூ.29.347 லட்சத்தில் நீட்ஸ் மானியம் உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.

Next Story