கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
பெரியகுளத்தில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வெள்ள தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று கலெக்டரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கஜா புயல் காரணமாக பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், நகரை ஒட்டியுள்ள வாரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரியகுளம் நகராட்சி 9-வது வார்டு காயிதே மில்லத் நகரில் தண்ணீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும் இந்த பகுதிக்கு செல்லும் பிரதான சாலை மழை வெள்ளத்தால் சேதம் அடைந்தது. தற்போது வரை இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே, இப்பகுதிக்கு வெள்ளம் வராமல் தடுக்க தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
அதேபோல், 28, 29-வது வார்டு மற்றும் 30-வது வார்டுகளில் வராகநதி கரையோரம் மக்கள் வசிக்கிறார்கள். கஜா புயலைத் தொடர்ந்து இங்கும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதியிலும் வெள்ள தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘வாழையாத்துப்பட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இங்கு செல்போன் கோபுரம் அமைக்காமல் தடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
செங்கதிர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் சொந்த வீடு இல்லாமல் வாழ்கின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அங்கு ஏற்கனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கிய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் பழமுதிர்ச்சோலை தலைமையில் தொழிலாளர்கள் அளித்த மனுவில், ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பணிக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சிறப்பு பலன்கள் வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வாகன குறைபாடுகளையும், ஊழியர்களின் ஓய்வு அறை குறைபாடுகளையும் நீக்க வேண்டும். 3 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய வாகனங்களை மாற்றி தர வேண்டும். முற்றிலும் அரசு பணத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் அளித்த மனுவில், ‘சுமைதூக்கும் தொழிலாளர்களின் சங்க கட்டிடம் தேனி சடையால் கோவில் தெருவில் அமைந்துள்ளது. தற்போது ராஜவாய்க்காலில் இருப்பதாக கூறி இந்த கட்டிடத்தை இடிக்க நோட்டீஸ் வழங்கி உள்ளனர். கட்டிடத்தை இடித்தால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, கட்டிடத்தை இடிக்காமல் தடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘கண்டமனூர் அம்பேத்கர் காலனி அருகில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கும் முயற்சி நடக்கிறது. இந்த கடை திறக்கப்பட்டால் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கடையை திறக்காமல் தடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘கொடுவிலார்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுக்க வேண்டும். ஆண்டிப்பட்டி அருகே நரசிங்காபுரம் கிழக்கு காலனியில் பொதுக்கழிப்பிடம், தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story