தூத்துக்குடியில் இரவு நேர விமான போக்குவரத்து மே மாதம் தொடக்கம் - அதிகாரி தகவல்


தூத்துக்குடியில் இரவு நேர விமான போக்குவரத்து மே மாதம் தொடக்கம் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2018 10:30 PM GMT (Updated: 31 Dec 2018 5:23 PM GMT)

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமான போக்குவரத்து மே மாதம் தொடங்குகிறது என்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முதல்-அமைச்சர் உத்தரவின்படி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு 601 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 410 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணைய குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மீதம் உள்ள 191 ஏக்கர் நிலம் இன்று (அதாவது நேற்று) விமான நிலைய ஆணைய குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனால் விரிவாக்கத்துக்கு தேவையான அனைத்து நிலமும் கையகப்படுத்தி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கும் பணியும் நடந்து வருகிறது.

இதுதவிர கூடுதலாக 96 ஏக்கர் நிலம் கேட்டு உள்ளார்கள். அந்த நிலத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தற்போது 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 1,350 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட விமான ஓடுதளம் அமைந்து உள்ளது. இதில் ஏ.டி.ஆர், கியூ.400 ஆகிய விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை 3,115 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் கொண்ட விமான ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது 2 விமானங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. கூடுதலாக 5 விமானங்களை நிறுத்தும் வசதி, கட்டுப்பாட்டு கோபுரங்கள், தீயணைப்பு நிலையம், கார் நிறுத்தும் இடம், 300 பயணிகள் வருகை மற்றும் வெளியேறும் கூடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக ரூ.500 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விமானநிலைய ஆணைய குழுமத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான நிலையம் அருகே உள்ள உயரமான மின்கோபுரங்கள் அகற்றுவது, வல்லநாடு மலைப்பகுதியில் சிக்னல் விளக்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற மே மாதம் முதல் இரவு நேர விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும். மேலும் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு கோடைகாலத்தில் விமான சேவை தொடங்குவதற்கான அறிவிப்பு வந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான ஆவணங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி, விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனிடம் வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிந்து, விமான நிலைய விரிவாக்கம் நில எடுப்பு தாசில்தார் நாகசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story