யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் 11-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நாமக்கல் கோர்ட்டில் வருகிற 11-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாமக்கல்,
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யுவராஜ், போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மாஜிஸ்திரேட்டு தனபால் வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story