திருவள்ளூரில் மதுக்கடைகளை திறக்காமல் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் + "||" + In the Tasmac manager office
Staff Siege Struggle
திருவள்ளூரில் மதுக்கடைகளை திறக்காமல் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
மதுக்கடை ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மதுக்கடை ஊழியர்கள், கடைகளை திறக்காமல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பொன்னேரி அனுமந்தையில் உள்ள மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் புருசோத்தமன்(வயது 44). நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், புருசோத்தமனை சரமாரியாக தாக்கியதுடன், அவரை கத்தியால் வெட்டி கல்லாவில் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதில் காயமடைந்த புருசோத்தமன், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மதுக்கடை விற்பனையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 225-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள், கடைகளை திறக்காமல் திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், புருசோத்தமனை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கே வங்கி ஊழியர்கள் சென்று விற்பனை பணத்தை பெற்றுச்செல்வது போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் வந்து பணத்தை பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அவர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று மாலை 6 மணியளவில் போராட்டத்தை கைவிட்ட மதுக்கடை ஊழியர்கள், அதன்பிறகு மதுக்கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபட்டனர்.
இதனால் நேற்று மதியம் 12 மணியில் இருந்து மதுபானம் வாங்குவதற்காக கடைகள் முன்பு மதுபிரியர்கள் திரண்டு இருந்தனர். ஆனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மதுபானம் வாங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். மாலையில் கடைகள் திறக்கப்பட்ட பிறகு மதுபிரியர்கள், ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.