வீட்டை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


வீட்டை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:30 AM IST (Updated: 1 Jan 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து இருந்தனர்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசல் மற்றும் பின்பகுதியில் உள்ள சிறிய வாசலில் போலீசார் நின்று கொண்டு மனு கொடுக்க வந்தவர்களை சோதனை செய்து அனுப்பினார்கள். ஆனால் சோதனையில் சிக்காமல் போலீசாரின் கண்ணை மறைத்து விட்டு உறையூரை சேர்ந்த தாய்- மகள் கையில் மண்எண்ணெய் பாட்டிலுடன் உள்ளே வந்தனர்.

அவர்கள் இருவரும் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப் -இன்ஸ்பெக்டர்கள் பாத்திமா, இந்திராகாந்தி, மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு பொன்னுசாமி ஆகியோர்அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் பாட்டிலை அவர்களிடம் இருந்து பிடுங்கினார்கள். பின்னர் அவர்களது தலையில் தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் உறையூர் செட்டிப்பேட்டை தெருவை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி முருகேசன் மனைவி செல்வி சீதாலட்சுமி (வயது48) மற்றும் அவரது மகள் காவேரி (20) என தெரியவந்தது. இது தொடர்பாக முருகேசன் நிருபர்களிடம் கூறுகையில் ‘காவல் துறையில் அமைச்சு பணியாளராக வேலை செய்து ஓய்வு பெற்ற எனது உறவினர் ஒருவருக்கும், எங்கள் குடும்பத்துக்கும் இடையே நிலப்பிரச்சினை உள்ளது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போதே அவர் நாங்கள் குடியிருந்து வந்த வீட்டை இடித்து விட்டார். இதனால் நாங்கள் வசிக்க வீடு இன்றி சாலையோரம் தங்கி இருக்கிறோம். இதுபற்றி போலீசில் புகார் செய்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. தெருவில் வசிப்பதை விட சாவதே மேல் என நினைத்து எனது மனைவியும், மகளும் தீக்குளிக்க முயன்றனர்’ என்றார்.

செல்வி சீதா லட்சுமியையும், காவேரியையும் மீட்ட போலீசார் அவர்களை செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து முருகேசனும், அவரது இன்னொரு மகளான சுபாவும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு சென்றனர்.

Next Story