சேலத்தில் 2 நாட்களில் 3.4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மாநகராட்சி ஆணையாளர் தகவல்


சேலத்தில் 2 நாட்களில் 3.4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2018 9:45 PM GMT (Updated: 31 Dec 2018 7:41 PM GMT)

சேலத்தில் கடந்த 2 நாட்களில் 3.4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம், 


தமிழக அரசின் ஆணைப்படி இன்று (செவ்வாய்க் கிழமை) முதல், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் “இங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை என்றும், பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்வதற்கு ஏதுவாக பிளாஸ்டிக் அல்லாத மக்கும் தன்மை கொண்ட மாற்று பைகளை கொண்டு வரவும்” என்ற அறிவிப்பு பலகையை கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, சேலம் மாநகரில் கடந்த 2 நாட்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதற்கு ஏதுவாக பல்வேறு இடங்களில் அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டன.

அதாவது, சூரமங்கலம் மண்டலத்தில் 201 இடங்களிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 208 இடங்களிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் 260 இடங்களிலும் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 240 இடங்கள் என மொத்தம் 909 இடங்களில் அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.

அதன்படி, சூரமங்கலம் மண்டலத்தில் 718 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 814 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளும், அம்மாபேட்டை மண்டலத்தில் 1,347 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளும் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 540 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் என 909 இடங்களில் வைக்கப்பட்ட அட்டை பெட்டிகளில் இருந்து 3.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் தார்சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படும். மீதமுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Next Story