தேவூர் பகுதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணி மும்முரம்
தேவூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தேவூர்,
தேவூர் அருகே சென்றாயனூர் தெற்கு தோட்டம் பாலிருச்சம்பாளையம், அம்மாபாளையம், சின்னாம்பாளையம், காணியாளம்பட்டி, பெரமாச்சிபாளையம், கோணக்கழுத்தானூர், வெள்ளாளபாளையம், காவேரிப்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, கொட்டாயூர், அர.செட்டிப்பட்டி, பழக்காரன் காடு, வட்ராம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கடந்த ஆண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பில் ஆலை கரும்பு சாகுபடி செய்திருந்தனர்.
அவ்வாறு கரும்பு சாகுபடி செய்து 10 மாதங்கள் முடிந்த நிலையில் உள்ள வயல்களில் தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதனால் தேவூர் பகுதியில் சென்றாயனூர், பாலிருச்சம்பாளையம், தண்ணிதாசனூர் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் கரும்பு அரவை ஆலைதாரர்கள் நேரடியாக கிராமப்புற விவசாயிகளின் வயல்களுக்கு சென்று ஆலை கரும்பு டன் ரூ.2 ஆயிரத்து 300 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வீதம் கொள்முதல் செய்கின்றனர்.
இவ்வாறு பெறப்படும் கரும்புகளை அரவை ஆலைகளில் எந்திரம் மூலம் கரும்பு அரவை செய்து கரும்பு சாறு பிழிந்து எடுக்கிறார்கள். பின்னர் கொப்பரையில் ஊற்றி கரும்பு சாறை நன்கு பதம் வரும் வரை கொதிக்க வைத்து, சர்க்கரை பதம் வந்தவுடன் மற்றொரு கொப்பரையில் ஊற்றி நாட்டு சர்க்கரை, குண்டு வெல்லம் தயாரிக்கும் பணியை கூலித்தொழிலாளர்களை கொண்டு செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணி இப்பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று நாட்டு சர்க்கரை ஒரு கிலோ ரூ.35 வீதமும், குண்டு வெல்லம் 30 கிலோ எடை கொண்ட சிப்பம் ரூ.1,150-க்கும் தேவூர் பகுதி கரும்பு அரவை ஆலைதாரர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story