குடிநீர் வசதி கேட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைத்த கிராமமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு


குடிநீர் வசதி கேட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைத்த கிராமமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:30 AM IST (Updated: 1 Jan 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வசதி கேட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைத்த கிராம மக்களால் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக வழங்கினர். முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கடனுதவி, பொதுநல மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு சென்று கலெக்டர் ராமன், அவர்களிடம் மனுக்களை வாங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

ஆற்காடு தாலுகா திமிரி ஒன்றியம் சென்னசமுத்திரம் பகுதி சிறுவிடாகம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ராமனிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் கையில் வைத்திருந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதை அவர்கள் வாங்க மறுத்து, மனு குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதுகுறித்து, அக்கிராம மக்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பல மாதங்களாக எங்கள் கிராமத்துக்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் நாங்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அரசு வழங்கிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தோம். எங்களது மனு குறித்து நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதியை மாவட்ட கலெக்டர் ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அட்டைகளை பொதுமக்கள் கலெக்டரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பென்னாத்தூர் பேரூராட்சி, அல்லிவரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் வட்டச்சாலை அமைப்பதற்காக அனைத்து விவசாய நிலத்தை அளவீடு செய்து, அதற்கான கொடிகளை அதிகாரிகள் நட்டுள்ளனர். அவ்வாறு கொடிகள் நடப்பட்டுள்ள பகுதிகளில் எங்களின் வாழ்வாதாரமான விவசாய கிணறு, கோழிப்பண்ணை மற்றும் ஆழ்துளை கிணறு போன்றவை அமைந்துள்ளன. நாங்கள் அனைவரும் இந்த விவசாய நிலத்தை நம்பி தான் வாழ்கிறோம். அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் விவசாயத்தையே நம்பி உள்ள எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, எங்களின் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படும். எனவே நீங்கள் நேரில் வந்து பார்வையிட்டு எங்கள் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வட்டச்சாலையை, மாற்றுப்பாதை வழியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆதி ஆந்திரா சமூக மக்கள் அளித்துள்ள மனுவில், வேலூர் மாவட்டம் முழுவதும் நாங்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த நகராட்சிகள் கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றோம். எனவே வேலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீட்டுமனைப்பட்டா வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஜூடோ போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற ராணிப்பேட்டை பள்ளி மாணவி தீபிகா மற்றும் தஞ்சாவூரில் தென்னக கலைப்பண்பாட்டு மையம் நடத்திய பரதநாட்டிய போட்டியில் இளந்தளிர்-2018 என்ற விருது பெற்ற பள்ளி மாணவன் சுதர்சன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் ராமனிடம் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

அதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கான 2018-2019-ம் ஆண்டு அரசின் திட்டங்கள் குறித்த கையேட்டினையும் கலெக்டர் ராமன் வெளியிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சுப்புலட்சுமி, குழந்தைகள் நல சங்க செயலாளர் சுசிலா, இணை செயலாளர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story