பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு


பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:15 AM IST (Updated: 1 Jan 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், எனக் கலெக்டர் ராமன் பேசினார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதைத் தடை செய்து, அதற்குண்டான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்து வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (இன்று) முதல் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்படும் என அறிவித்தார். இதனை முழுமையாக செயல்படுத்திட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பல்வேறு விதமான விழிப்புணர்களை பொதுமக்கள், வணிகர்கள், மாணவ-மாணவிகளிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை அனைவரும் தவிர்த்திட வேண்டும்.


உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் முதன்மைப் பேக்கிங் செய்யும்போது, அவர்களுடைய முத்திரைகள் அடங்கிய பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை அடைத்து விற்க வாடிக்கையாளர்களுக்கு அனுமதி உண்டு. இதைத் தவிர வணிகர்கள் பெரிய பைகளில் பெறப்பட்ட உணவுப் பொருட்களை சிறிய அளவு பாக்கெட்டுகளாக மாற்றி விற்பனை செய்ய அனுமதி கிடையாது. இதுபோன்ற சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகளை வணிகர்கள் முழுமையாக தவிர்த்திட வேண்டும்.

அதற்கு மாற்றான பேக்கிங் பொருட்களை உபயோகப்படுத்திட வணிகர்களும், பொதுமக்களும் பழகிக் கொள்ள வேண்டும். அரசின் இந்தச் சட்டம் ஜனவரி 1-ந் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயமாக இதனை பின்பற்ற வேண்டும். எனவே பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தமது வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவு மற்றும் தூக்கி எறியக்கூடிய கைப்பைகளை சேகரித்து உள்ளாட்சி அமைப்புகள், தூய்மைக் காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


இதை உடனடியாக செயல்படுத்திட வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்குச் சில இன்னல்கள் ஏற்படும். இருந்தபோதிலும் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்திட பழகிக் கொண்டால், இது எளிதில் சாத்தியமாகும். ஆகவே வணிகர்கள் அரசின் இந்தச் சட்டத்தினை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வியாபாரிகள் கூறுகையில், அரசு அறிவித்த 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். தற்போது ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த கூடாது எனக் கூறுவது வணிகர்களிடையே தெளிவற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இதனால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வருவாய் இழப்பும் ஏற்படும், என்றனர்.

கூட்டத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருண் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்பு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story