மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி - பொதுமக்கள் சாலை மறியல்
பழனி அருகே, மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெய்க்காரப்பட்டி,
பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டி அருகே குருவன்வலசு கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மயான பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மயானத்துக்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் சென்றது. குழாய் உடைப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று குருவன்வலசு பஸ் நிறுத்தம் அருகே, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மயான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்றவேண்டும். குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக போலீஸ் துணை சூப்பிரண்டு உறுதி அளித்தார். அதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story