டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Jan 2019 4:15 AM IST (Updated: 1 Jan 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

பணகுடியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சூசையப்பர் நற்பணி மன்றத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பணகுடி சூசையப்பர் ஆலயம் அருகில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், பணகுடி சூசையப்பர் ஆலயம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குடியிருப்பு பகுதியாக உள்ளதால் அங்கு டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டை மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கீழப்பாவூர் பகுதியில் அரசு திட்டத்தில் இலவச வீடு கட்டுபவர்களுக்கு உரிய நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வீடு கட்டுபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

அகில பாரத இந்து மகா சபாவினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படுவது போல் இந்துக்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இந்து கோவில்களில் பிற மதத்தினர் கடைகள் நடத்த அனுமதிக்கக்கூடாது. வீட்டுமனை இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வண்ணார் சமுதாய முன்னேற்ற நலச்சங்கத்தினர் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், வண்ணார் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, இஸ்திரி பெட்டி மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனையில், சுகாதார பயிற்சி மற்றும் செவிலிய பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளை மட்டுமே பணியில் நியமிக்க வேண்டும் என்று பல்நோக்கு சுகாதார பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டளை சொத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அனுபவிப்பவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை டவுனை சேர்ந்த குட்டி என்பவர் மனு கொடுத்தார்.

நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போலீசார் மீது புகார் மனு கொடுத்தார். இதேபோல் நெல்லை விளாகத்தை சேர்ந்த பார்வதி என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த கோபி சரவணன் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாய், சகோதரன் ஆகியோருடன் வந்தும் போலீசார் மீது புகார் மனு கொடுத்தனர்.

Next Story