மாவட்ட செய்திகள்

தஞ்சை பெரியகோவிலில் காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள் கேள்விகுறியாகும் பாதுகாப்பு? பக்தர்கள் அதிர்ச்சி + "||" + Surveillance cameras for questioning in Tanjore Biggovil Devotees shocked

தஞ்சை பெரியகோவிலில் காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள் கேள்விகுறியாகும் பாதுகாப்பு? பக்தர்கள் அதிர்ச்சி

தஞ்சை பெரியகோவிலில் காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள் கேள்விகுறியாகும் பாதுகாப்பு? பக்தர்கள் அதிர்ச்சி
தஞ்சை பெரியகோவிலில் காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்களால் பாதுகாப்பு கேள்விகுறியாகுவதாக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்,


தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1010–ம் ஆண்டு கட்டினான். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக வானுயர நிமிர்த்து காட்சி அளிக்கிறது.


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறையினர் கோவிலை பராமரித்து வருகின்றனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.


தஞ்சை பெரியகோவிலில் தற்போது கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராஜராஜன் கோபுர நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டு பக்தர்கள் சோதனைக்குப்பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். உலக பாரம்பரிய சின்னமாக திகழும் பெரியகோவில் உள்ளிட்ட மிகவும் பழமைவாய்ந்த கோவில்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதி எந்த நேரமும் கோவிலை சுற்றிலும், கோவில் முன்பகுதி மற்றும் கோவில் வளாகங்களை கண்காணிக்கும் வகையில் கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2014–ம்ஆண்டு ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ராஜராஜன் கோபுர நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவுவாயில், கோவில் பிரகாரங்கள், கோவிலை சுற்றிலும் என 31 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் 10 கேமராக்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. இந்த கேமராக்கள் மூலம் 1000 மீட்டர் சுற்றளவில் நடக்கும் எந்தவொரு நிகழ்வையும் துல்லியமாக படம் பிடித்து பதிவு செய்ய முடியும்.


இதற்காக ராஜராஜன் கோபுரத்தின் நுழைவுவாயில் அருகே கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் கோவிலுக்குள் சந்தேகப்படும்படியான ஆசாமிகள் யாராவது நடமாடுகிறார்களா? என்பதை கண்காணித்து வந்தனர். இந்த கேமராக்கள் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் வகையில் இருந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் வீசிய கஜா புயல் காரணமாக தொலைதொடர்பு சாதனங்கள் பழுதானதால் மீண்டும் கோவிலில் உள்ள அனைத்து கேமராக்களும் செயல்படவில்லை. இதனால் கோவில் பாதுகாப்பு கேள்விகுறியாவதாக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சை பெரியகோவிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜசோழன் சிலை, லோகமாதேவி சிலை ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டு பெரியகோவிலுக்கு கொண்டு வந்தனர். கோவிலில் இன்னும் நிறைய ஐம்பொன் சிலைகள் உள்ளன.


பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கோவிலில் உள்ள சிலைகளின் பாதுகாப்பிற்காகவும் காட்சி பொருளாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து மீண்டும் செயல்பட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.


பெரியகோவில் வளாகத்தில் நின்ற 3 சந்தன மரங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றுவிட்டனர். கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் துணிச்சலாக வந்து சிலர் கடத்தல் சம்பவத்தை நிறைவேற்றினர். இதில் ஈடுபட்டவர்கள் யார்? என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை அதிகாரிகளும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பெரியகோவில் அருகே பெத்தண்ணன் கலையரங்கம் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட 70 வயது முதியவர், வெள்ளை நிற கார் மோதி படுகாயம் அடைந்தார்.

விபத்து நடந்த பகுதி, பெரியகோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் என்பதால், கார் நம்பரை கண்டுபிடிப்பதற்காக போலீசார், முதியவரின் உறவினர்கள் முயற்சி செய்தபோது தான் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இதனால் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவிலுக்கு வந்த ஊழியர் ஒருவர், யானை மண்டபம் அருகே மொபட்டை நிறுத்திவிட்டு சென்றார். 10 நிமிடம் கழித்து வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை.

இப்படி சிறு, சிறு சம்பவங்களை கூட கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் கண்டறிய முடியவில்லை. கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரையும் போலீசார் உதவியுடன் கண்காணிக்க முடியாது. குழந்தை கடத்தல், நகை திருட்டு என்பது எளிதாக நடக்கிறது. அப்படி யாராவது குழந்தையை கடத்தி சென்றாலோ, நகையை திருடி சென்றாலோ அந்த நபரை கண்காணிப்பு கேமராக்கள் இருந்தால் எளிதாக கண்டறிய முடியும். இப்போது எப்படி முடியும். பெரியகோவிலில் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது என பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரே வேதனையுடன் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
2. திருமானூர் அருகே புழுக்கள் கலந்து வந்த குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி
திருமானூர் அருகே புழுக்கள் கலந்து வந்த குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
3. சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. புதுக்கோட்டை மாவட்ட அம்மன் கோவில்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்ட அம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
5. தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி: லாலு பிரசாத் யாதவ் மதிய உணவு சாப்பிட மறுப்பு
தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியால், லாலு பிரசாத் யாதவ் மதிய உணவு சாப்பிட மறுப்பு தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...