கலெக்டர் அலுவலகம் முன், சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.1-க்கு விற்று விவசாயிகள் நூதன போராட்டம்
சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்து கோவை கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் நடைபாதை வசதி, வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமை யில் ஏராளமான விவசாயிகள் 3 மூட்டைகளில் சின்ன வெங்காயம் கொண்டு வந்து, கலெக்டர் அலுவ லகம் முன் வைத்தனர். அவர்கள், சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு கிலோ சின்னவெங்காயம் வாங்கினால், ஒரு கிலோ சின்ன வெங்காயம் இலவசம் என்று அறிவித்தனர். இதனால் சின்ன வெங்காயத்தை பலரும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ததின் மூலம் கிடைத்த பணம் ரூ.319-ஐ விவசாயிகள் பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ள தாவது:-
கோவையில் இந்த ஆண்டு சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சின்னவெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.145 வரை விலை போனது. ஆனால் தற்போது கிலோ ரூ.7 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட ரூ.85 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அறுவடை காலத்தின் போது கோவையில் சின்ன வெங்காயம் கொள்முதல் மையத்தை அரசு திறக்க வேண்டும். சின்னவெங்காய விதைகளை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். பட்டறையில் வைக்கப்பட்டு இயற்கை சீற்றத்தால் சின்னவெங்காயம் பாதிக்கப்பட்டால், அந்த விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். சின்னவெங்காயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கோவை கணபதி காமராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். தற்போது அவர்களுக்கு கீரணத்தம் பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்டதால் அங்கு சென்று விட்டனர். ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு விட்டன. இதனால் இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட 2.16 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இங்கு சமுதாயக்கூடம், அரசு ஆரம்பப்பள்ளி, மகப்பேறு ஆஸ்பத்திரி ஆகியவை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
பறிமுதல் செய்யக்கூடாது
கோவை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், தமிழக வியாபாரிகள் சம்மேளன கோவை கடைவீதி கிளை தலைவர் கே.எல்.மணி உள்பட வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், தமிழக அரசு 1-ந் தேதி (இன்று) முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள 14 பொருட்களை தவிர்த்து மறுசுழற்சி செய்யப்படும் மற்ற பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
கவுண்டம்பாளையம் முல்லைநகர் மற்றும் காளப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம். எனவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கோவையை அடுத்த பெரியகோடாங்கிபாளையத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 70) அளித்த மனுவில், சூலூர் அருகே அரசூரில் எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.5 கோடி ஆகும். இது எங்கள் குடும்பத்தினரின் பூர்வீக சொத்து. இந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அவர்களுக்கு சொந்தமாக்கி உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலத்தை மீட்க நான் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். தற்போது எனக்கு கோர்ட்டு, வழக்கு என செலவு செய்ய முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். எனவே எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். அல்லது ஜனாதிபதி தனக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி என்னை கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story