நிதி நிறுவனம் நடத்தி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


நிதி நிறுவனம் நடத்தி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 1 Jan 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தனியார் நிதி நிறுவனத்தில் தனிநபர் கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் ஆவணங்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் வரை செலுத்தினோம். ஆனால் கடன் தொகையை வழங்கவில்லை. எனவே பணம் மற்றும் காசோலை, கடன் பத்திரதாள்களை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் பணத்தை பெற்றுக்கொண்டு கடன் தொகையை வழங்காத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உடுமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரபிரசாத், உதயசந்திரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நிதி நிறுவனம் குறித்து கோவையில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்க வேண்டும். அவர்கள் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-

உடுமலை ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் பெயரில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினார்கள். அதில் முதலில் ரூ.15 ஆயிரம் முன் வைப்பு தொகை செலுத்தினால் ரூ.3 லட்சம் வரை தனி நபர் கடன் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதேபோன்று மகளிர் சுயஉதவிக்குழு உள்பட பல்வேறு கடன்கள் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது, பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல் மற்றும் காசோலை, கடன் உறுதிமொழி பத்திரம் ஆகியவை கொடுத்தோம். மேலும் ரூ.15 ஆயிரமும் செலுத்தினோம். இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி பணம் தருவதாக கூறியதை தொடர்ந்து அங்கு சென்றோம்.

அவர்கள் சர்வர் பிரச்சினையால் கடன் தொகையை வழங்க முடியாததால் 31-ந்தேதி வாருங்கள் என்றனர். அதன்படி இன்று (நேற்று) வந்து பார்த்தபோது நிதி நிறுவனம் பூட்டி கிடந்தது. இதனால் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்கள், தனி நபர்கள் உள்பட சுமார் 200 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே பணம் மற்றும் காசோலையை வாங்கி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story