பந்தலூர் இன்கோ நகரில் சாலை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


பந்தலூர் இன்கோ நகரில் சாலை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:00 AM IST (Updated: 1 Jan 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் இன்கோ நகரில் சாலை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுவாக அளித்தனர். அதன்படி, பந்தலூர் இன்கோ நகர் பொதுமக்கள் சாலை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இன்கோ நகர் பகுதியில் 83 குடும்பத்தினர் தமிழக அரசு வழங்கிய இலவச பட்டாவில் வசித்து வருகின்றனர். அப்பகுதி நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்டது ஆகும். கடந்த பல ஆண்டுகளாக குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. தற்போது குடிநீர், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்கோ நகர் மலை மேல் இருப்பதால், இரவு நேரங்களில் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லவும், அவசர தேவைக்கு வெளியே செல்லவும் சாலை இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரேனும் இறந்து விட்டால், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கையால் தூக்கி கீழே கொண்டு வந்து அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கடைகளை ஏலம் விட கோரிக்கை

நீலகிரி தொகுதி மக்கள் இயக்க தலைவர் ராஜ் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளை பொது ஏலம் விட்டு ஒதுக்கக்கோரி மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊட்டி மத்திய பஸ் நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மோசமான நிலையில் இருந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த நிதி மூலம் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த பணிகளில் உரிய தரம் இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கும் ஓய்வறையின் மேற்கூரை பழுதடைந்த நிலையிலும், கடுங்குளிரை தரக்கூடியதாகவும் உள்ளது. தற்போது அந்த அறைகளுக்கு முன்பு இரும்புகள் மூலம் கண்ணாடி பொருத்தும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகள் குறிப்பிட்ட சிலருக்கு மறைமுகமாக ஒதுக்கப்படுவது தெரியவந்து உள்ளது. எனவே, அனைத்து கடைகளையும் பொது ஏலம் விட்டு கடைகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமவெளியில் 10 ஆண்டுகள் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை முழுமையாக மாற்றி புதிய பஸ்களை நீலகிரியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 135 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஊட்டி தாலுகா மசினகுடி செம்மநத்தம் குருபத்தியம்மாள் இருளர் சிமெண்ட் உற்பத்தி சங்கத்திற்கு செங்கல் சூளை அமைக்க ரூ.3 லட்சத்துக்கான காசோலை, பொக்காபுரம் பகுதியை சேர்ந்த பொக்காபுரம் மாரியம்மன் இயற்கை பண்ணை விவசாயிகள் சங்கத்திற்கு வீட்டுத்தோட்டம் அமைக்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை, கூடலூர் தாலுகா ஏழுமுறம் பகுதியை சேர்ந்த இப்பிமாலா பனியர் முன்னேற்ற சங்கத்திற்கு பாக்கு மட்டை தயாரிக்க ரூ.2 லட்சத்துக்கான காசோலை, ஊட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சந்திரசேகர் என்பவருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை பெறு வதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Next Story