கடந்த ஆண்டில் நீலகிரியில் 228 சாலை விபத்துகள் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்


கடந்த ஆண்டில் நீலகிரியில் 228 சாலை விபத்துகள்  - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2018 10:15 PM GMT (Updated: 31 Dec 2018 10:37 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 228 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் அமைதியான மாவட்டமாக இருந்து வருகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தி, கோவில் திருவிழாக்கள் மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய மக்கள் இடையே பிரச்சினை இல்லாமல் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 94 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. திருட்டு போன மதிப்பு ரூ.40 லட்சத்து 37 ஆயிரத்து 380 ஆகும். இதில் 93 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.35 லட்சத்து 45 ஆயிரத்து 630 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.

நீலகிரியில் 6 கொலை வழக்குகளில், 3 வழக்குகள் சிறு பிரச்சினையால் ஏற்பட்டவை. 6 கொலையாளிகளையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பெருங்குற்றங்கள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டு 510 குற்ற வழக்குகளில் தண்டனை பெறப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். நேற்று எமரால்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டு உள்ளார். நீலகிரியில் கடந்த ஆண்டு மொத்தம் 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 228 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். காவல்துறையின் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையால், கடந்த 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டு சாலை விபத்துகள் குறைந்து உள்ளது. குடிபோதையில் வாகனம் இயக்குவது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற 6 வகையான பிரிவின் கீழ், 21 லட்சத்து 33 ஆயிரத்து 321 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடியே 60 லட்சத்து 87 ஆயிரத்து 925 அபராதமாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

மாவட்டம் முழுவதும் 672 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறை அறிவிப்புக்கு முன்பாகவே பலர் தங்களது கடை மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். தொட்டபெட்டா சந்திப்பில் ஒரு புற காவல்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, பாட்டவயல், நாடுகாணி ஆகிய 5 சோதனைச் சாவடிகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் (வாகன எண்ணை பதிவு செய்யும்) பொருத்தப்பட்டு இருக்கிறது. குன்னூர் அருகே காட்டேரி சந்திப்பில் 24 மணி நேரமும் சோலார் மின் விளக்குகள் சாலையோரத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட எல்லை பகுதிகளான கர்நாடகா, கேரளா மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ளது. இதனை கண்காணிக்க நீலகிரியில் 3 நக்சல் தடுப்பு பிரிவுகள் இயங்கி வந்தன. தற்போது கூடுதலாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 592 கிராமங்களில், 212 கிராமங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் புகார்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. 2 ஆயிரத்து 381 சிறு தண்டனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 846 வழக்குகள் முடிக்கப்பட்டு உள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story