மஞ்சூர்- கோவை சாலையில், அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு


மஞ்சூர்- கோவை சாலையில்,  அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2018 10:15 PM GMT (Updated: 31 Dec 2018 10:37 PM GMT)

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகளால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மஞ்சூர்,

மஞ்சூரில் இருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு சாலை செல்கிறது. இது நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்லும் 3-வது மாற்றுப்பாதையாக விளங்குகிறது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மஞ்சூர்-கோவை சாலை இருபுறமும் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. அந்த வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த வனவிலங்குகள் மஞ்சூர்- கோவை சாலையை அடிக்கடி கடக்கும் நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. மேலும் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று வனத்துறை சார்பில் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 6.15 மணியளவில் வழக்கம்போல் கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டது. அந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். கெத்தை அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, திடீரென குட்டியுடன் 4 காட்டுயானைகள் அரசு பஸ்சை வழிமறித்தன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 1 மணி நேரம் சாலையிலேயே உலா வந்த காட்டுயானைகள், அதன்பிறகு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இதேபோல் மாலை 3 மணியளவில் தெகும்பள்ளம் அருகில் 5 காட்டுயானைகள் சாலையில் உலா வந்தன. அப்போது மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி வந்த காரை தாக்க முயன்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அந்த நேரத்தில் கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி வந்த அரசு பஸ்சின் டிரைவர் ஒலி எழுப்பியதால், காட்டுயானைகள் அங்கிருந்து மிரண்டு வனப்பகுதிக்குள் ஓடின.

Next Story