பிற்படுத்தப்பட்டோருக்கு தொழில் தொடங்க கடன் உதவி; கலெக்டர் தகவல்


பிற்படுத்தப்பட்டோருக்கு தொழில் தொடங்க கடன் உதவி; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:45 AM IST (Updated: 1 Jan 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பொதுக்கால கடன் திட்டத்தின் கீழ் சிறு தொழில், வியாபாரம் தொடங்க தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்களுக்கான கடன் வழங்கும் சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

மேலும் புதிய பொற்காலத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் மகளிருக்கான காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகப்பட்ச கடன் தொகையாக ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும். ஆண்களுக்கு சிறுகடன் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படும்.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினராக உள்ளவர்களுக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்கப்படும். மேலும், புதிய கடன் திட்டத்தின் கீழ் இளம் தொழிற் கல்வி பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க கடன் திட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், அவர்கள் சுயதொழில் தொடங்கும் கடன் திட்டத்தின்படி அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறு கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

மேற்சொன்ன திட்டங்களுக்கு கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story