புதுமடம் ஊருணி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு


புதுமடம் ஊருணி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு
x
தினத்தந்தி 31 Dec 2018 11:15 PM GMT (Updated: 31 Dec 2018 11:07 PM GMT)

புதுமடம் ஊருணி நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழக்கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊரில் மத்திய பகுதியில் 2 இடங்களில் மதுக்கடை உள்ளதால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதோடு, மதுபாட்டில்கள், குப்பைகள் நிறைந்து கடும் சுகாதாரக்கேடாக அந்த பகுதி உள்ளது. இதனால் அந்த வழியாக பெண்கள் உள்பட யாரும் செல்ல முடியாத நிலை இருந்து வருவதால் உடனடியாக அந்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி முகமூடி அணிந்து வந்து மனு கொடுத்தனர். மண்டபம் யூனியன் புதுமடம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆண்கள் ஊருணியை நமக்கு நாமே திட்டத்தில் ரூ.2 லட்சம் செலவிலும், புதுமடம் தரவையை ரூ.25 லட்சம் செலவிலும் மராமத்து செய்து கொடுத்துள்ளோம்.

தற்போது பெண்கள் ஊருணியை தூர்வார முயற்சி மேற்கொண்டுள்ளபோது அதில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதால் தூர்வார முடியவில்லை. இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுத்தால் நாங்களே செலவழித்து தூர்வாரி நீர்நிலையை பாதுகாத்து கொள்வோம், மேலும், குப்பை கிடங்கிற்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரி தங்களின் கோரிக்கை அட்டைகளை ஏந்திவந்து மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் ஏராளமான பெண்கள் திரளாக வந்து கடந்த 2013–ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களாக பணியாற்றி வந்தோம். 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் எங்களுடன் பணியாற்றிய ராமநாதபுரம் பாரதிநகர் காந்திதெருவை சேர்ந்த செவிலியர் ராஜேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் ரவி ஆகியோர் வந்து மதுரை கோமதிபுரம் பகுதியை சேர்ந்த வக்கீல் பூபதி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வேலை வாங்கி தந்துவிடுவார் என்று கூறினர். அவர்களின் பேச்சை நம்பி 28 பேர் சேர்ந்து தலா ரூ.7,000 வழக்கு செலவிற்காக கொடுத்திருந்தோம்.

இந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதாகவும், அதிகாரிகளுக்கு வேலைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி தலா ரூ.1½ லட்சம் வாங்கினர். இவ்வாறு ரூ.42 லட்சம் பணம் பெற்றுக்கொண்டும் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணம் கேட்டபோது மிரட்டுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story