ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி: சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி: சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 Dec 2018 11:30 PM GMT (Updated: 31 Dec 2018 11:14 PM GMT)

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி. எனவே சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம், 

என்னுடைய பெயரை பயன்படுத்தி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்று தெரியாது. அப்படி யாரும் என் குடும்பத்தில் இல்லை. இந்த மிரட்டல் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

விளம்பர பதாகை வைக்கும் விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக நானோ, அ.தி.மு.க. கட்சியினரோ செயல்பட மாட்டார்கள். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 2 நாட்களில் குணமாகி வந்துவிடுவார் என்று நம்பி அ.தி.மு.க.வை சேர்ந்த 1½ கோடி தொண்டர்கள் மருத்துவமனை முன்பு காவல் காத்துக்கொண்டிருந்தனர். அவர் இன்று வருவார், நாளை வருவார் என சொன்னார்கள். ஆனால் திடீரென்று ஒரு நாள் இரவு ஜெயலலிதா மாரடைப்பால் இறந்துவிட்டதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்கள்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் என்ன நடந்தது? நன்றாக இருந்த ஜெயலலிதா, மருத்துவமனைக்கு செல்லும் முன்பு வரை ஆட்சி, கட்சியை கவனித்து வந்தார், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து 75 நாட்களும் அவரை பார்க்க அன்று, முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்தவர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதுதான் உண்மை.

ஆனால் ஜெயலலிதா உப்புமா, இட்லி, தோசை சாப்பிட்டார் என்று சொல்லி அவருடைய மருத்துவ செலவில் ரூ.1.17 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. யார் சாப்பிட்டார்கள். ஜெயலலிதா சாப்பிட்டாரா? நான் கேட்கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பார்க்க வருபவர்கள் அறையில் தங்கியிருக்கலாம். மற்றவர்கள் வீட்டிற்கு சென்று வரலாம். விடுதி எடுத்தும் தங்கியிருக்கலாம். இதுதான் முறை. எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும் இதுதான் நடக்கும்.

அதிர்ச்சி தகவல்கள்

ஆனால் மருத்துவமனையையே உல்லாச விடுதியாக மாற்றிக்கொண்டு அங்கு ஒரு குடும்பம் மொத்தமும் தங்கிக்கொண்டது. எந்த குடும்பம் ஒட்டு மொத்தமாக ஜெயலலிதாவினால் விரட்டியடிக்கப்பட்டதோ அந்த குடும்பம்தான் அங்கு தங்கி இருந்தது. சசிகலாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் அங்கேயே தங்கி இட்லி, தோசை சாப்பிட்டுள்ளனர். இதில்தான் உள்நோக்கம் அடங்கியிருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் அடங்கியிருக்கிறது. தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வந்து கொண்டிருக்கிறது. அவரது மர்ம மரணம் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்லி ஆறுமுகசாமி விசாரணை கமிட்டி அமைத்து இதுவரை 140 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகிறது.

2 நாட்களுக்கு முன்பு ஆணையத்தின் வக்கீல், ஆணையத்தில் ஒரு மனு கொடுத்திருக்கிறார். அதில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். பொய்யான தகவலை கொடுத்தும், ஆவணங்களை மறைத்தும் உள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு முறையாக சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்றைக்கு உயிரோடு இருந்திருப்பார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என்று 3 டாக்டர்கள் எடுத்துக்கூறியதை மீறி ஏன் ஆஞ்சியோகிராம் செய்யப்படவில்லை?.

75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் இந்த ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் என்று தடுத்தது யார்?, தவறான தகவல்களை சொன்னது யார்? தவறான சிகிச்சை கொடுத்தது யார்? மருத்துவமனையின் நோக்கம் என்ன, அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்?.

ஆஞ்சியோகிராம் செய்தால் உயிர் பிழைத்துவிடுவார் என்று நினைத்தது யார், இந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும். ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பலராலும் சொல்லப்பட்டது. மத்திய அரசு ஏர்ஆம்புலன்ஸ் தயார் செய்யச்சொல்லி அனைத்து ஏற்பாடுகளும் செய்தபோது தடுத்து நிறுத்தியது யார்?, ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சைக்குச்சென்றால் இந்திய மருத்துவர்களை குறைவாக பேசுவார்கள், அவர்களின் மரியாதை என்னவாகும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

உயிரை விட மரியாதைதான் முக்கியமா? ராதாகிருஷ்ணன் பின்னணியை விசாரிக்க வேண்டும். முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், வெளிநாடு சிகிச்சை குறித்து தமிழக அமைச்சரவையில் தெரிவித்ததாக கூறினார். ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்றதில் இருந்து அவர் மரணம் அடையும் வரை அமைச்சரவை கூட்டமே நடக்கவில்லை. இதற்கு நான் சாட்சி. ஆணையத்தில் ராமமோகன்ராவ், தவறான தகவலை தெரிவித்திருக்கிறார். அவரை அவ்வாறு சொல்லத்தூண்டியது யார்?

தமிழக மக்கள் சந்தேகப்பட்டதைப்போல் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி. ஆறுமுகசாமி ஆணையம் உடனடியாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

இது அரசுக்கும், அ.தி.மு.க.விற்கும் இருக்கிற கடமை. மருத்துவமனையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது யார்? என்று தெரியவேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இருந்தாலும் சிறப்பு விசாரணை குழுவே உண்மைகளை வெளிக்கொணர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story