கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்; அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத்தலைவர் செந்தில் கூறினார்.
மதுரை,
சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டது மிகவும் தவறானது. எந்த வகையிலும் அந்த தவறை நியாயப்படுத்த முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் தேவையான மருத்துவ உதவிகள், நிவாரண உதவிகள் செய்யப்படுகின்றன. ரத்தம் வழங்கிய வாலிபரும் தற்கொலை செய்துவிட்டார்.
தமிழகத்தில் உள்ள ரத்தவங்கிகள் அனைத்தும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு முகமை ஆகியவை வகுத்துள்ள விதிகளின்படியே செயல்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தை பொருத்தவரை ரத்தம் வழங்கிய வாலிபர் கடந்த 2016–ல் முதல்முறையாக ரத்தம் கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு 18 வயது நிரம்பவில்லை. ஆனாலும் அவர் விண்ணப்பத்தில் 18 வயது நிரம்பியவர் என்றும், போலியான முகவரியை தெரிவித்தும் ரத்தம் கொடுத்துள்ளார். அப்போதே அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தும் முறையான முகவரி இல்லாததால் அவருக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவருகிறது.
இரண்டாவது முறையாக அவர் ரத்தம் கொடுத்தபோது ரத்தவங்கியில் பணியில் இருந்த ஊழியர் கவனக்குறைவாக செயல்பட்டு வாலிபரின் ரத்தத்தை பரிசோதனை செய்யாமலேயே எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால் சாத்தூரில் பணியில் இருந்த டாக்டர்கள் ரத்த வங்கியில் இருந்து வந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியதால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ரத்த வங்கியிலும் ஊழியர்களின் பணியை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் இருக்கவேண்டும். ஆனால் மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்பட சில பெரிய ஆஸ்பத்திரிகளில் மட்டுமே கண்காணிப்பாளர்கள் உள்ளனர். மேலும் ரத்த வங்கிகளில் எங்குமே ஆலோசகர் பணியிடங்கள் இல்லை. ரத்த தானம் வழங்க வருபவர்களை ஆலோசகர் தகுந்த விசாரணை நடத்தி நோய் ஏதும் உள்ளதா என்பது தொடர்பாக கண்டறிந்து விடுவார். எனவே ஆலோசகர் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். வருங்காலங்களில் ரத்த தானம் தொடர்பாக முன்எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த சம்பவம் அறிவுறுத்துகிறது.
ரத்ததானம் செய்பவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டவுடன் அது ரத்த பரிசோதனையில் தெரியவராது. குறைந்தபட்சம் ஒரு மாதம் கழித்தே எச்.ஐ.வி. பாதிப்பு தெரியவரும். ஆனால் அவரது ரத்தத்தை செலுத்தும்போது நோயாளிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு வந்துவிடும். மருத்துவத்துறையில் இது எப்போதாவது நடப்பது உண்டு. இதனால்தான் நோயாளிக்கு அவரது குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய உறவினர் ரத்ததானம் செய்ய வலியுறுத்துகிறோம். எனவே எதிர்காலத்தில் இதில் தவறு நேராதவாறு அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதற்கு தயங்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். எனவே கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.
முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக கேள்வி எழுப்பி வருகிறது. துறைசார்ந்த மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவை ஆணையத்துக்கு உதவியாக நியமித்து, அந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் கேள்விகள் எழுப்புவது, விசாரணை நடத்துவதே சரியானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.