பண்ருட்டி அருகே, பரபரப்பு மணல் குவாரியை அரசியல் கட்சியினர் முற்றுகை; போலீசாருடன் தள்ளுமுள்ளு


பண்ருட்டி அருகே, பரபரப்பு மணல் குவாரியை அரசியல் கட்சியினர் முற்றுகை; போலீசாருடன் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 1 Jan 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே மணல் குவாரியை மூடக்கோரி அரசியல் கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கணேசன் எம்.எல்.ஏ. உள்பட 340 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ளது எனதிரிமங்கலம். இந்த கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் தற்காலிகமாக மூடப்பட்ட குவாரி, தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து அவர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 26-ந்தேதி குவாரியை மூடக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் எனதிரிமங்கலம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அனுமதி பெறாமலும், தடையை மீறியும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் என மொத்தம் 511 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் அந்த மணல் குவாரியை மூட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், அரசியல் கட்சியினர் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் எனதிரிமங்கலம் குவாரி முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவகொழுந்து, தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஆனந்தி சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி சுரேந்தர், தமிழ் மாநில காங்கிரஸ் நெடுஞ்செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முல்லைவேந்தன், தே.மு.தி.க. முத்துக்கிருஷ்ணன், மக்கள் பாதுகாப்பு கவசம் தட்சிணாமூர்த்தி மற்றும் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும், பொதுமக்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் போலீசாரின் இந்த தடையையும் மீறி பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் குவாரிக்குள் நுழைந்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களிடம், போலீசார் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்கள் குவாரியைவிட்டு வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து கணேசன் எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகளுடன் சப்-கலெக்டர் (பொறுப்பு) வெற்றிவேல் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனே மணல் குவாரியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் ஏற்க மறுத்து, அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கணேசன் எம்.எல்.ஏ. உள்பட 340 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இவர்களில் 110 பேர் பெண்கள் ஆவர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story