ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் வழக்கில் மேலும் ஒருவர் கைது


ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 5:36 AM IST (Updated: 1 Jan 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

தாராபுரத்தில் கடந்த டிசம்பர் 20–ந்தேதி, ஒட்டன்சத்திரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்த முயன்றபோது, அந்த காரை ஓட்டிவந்த நபர் போலீசாரை கண்டதும் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை தங்களது வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் சோதனையிட்டபோது, காருக்குள் ஒரு பெரிய பையில் செல்லாத பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது.

போலீசார் பணத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் காரில் வந்தவர்கள் கோவை ஆவாரம்பாளைத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பிரதீஸ்ராஜ் (வயது 36), கோவை கணபதி கே.ஆர்.ஜி. நகரை சேர்ந்த சண்முகம் மகன் கலைச்செல்வன் (33) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்களுக்கு கோவை கிராஸ்கட் ரோட்டைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் தான் செல்லாத பழைய 1 கோடி ரூபாயை கொடுத்ததும், அதை காரில் மதுரைக்கு சென்று புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற முயன்று முடியாமல் போனதால், மீண்டும் தண்டபாணியிடம் அந்த பணத்தை கொடுப்பதற்காக காரில் கோவைக்குச் சென்று கொண்டிருந்தபோது போலீசாரிடம் அவர்கள் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரதீஸ்ராஜையும், கலைசெல்வனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த தண்டபாணியை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று தண்டபாணி அவரது வீட்டில் இருப்பதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கோவைக்கு விரைந்து சென்று, தண்டபாணியை(45) கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தண்டபாணி சில நாட்களுக்கு முன்பு சூலூர் அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு சாலையோரமாக இருந்த புளியமரத்தடியில் ஒரு பை கிடந்து உள்ளது. அங்கு சென்று பார்த்த போது பைக்குள் செல்லாத நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடந்து உள்ளது. உடனே அந்த பையை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்து விட்டதாகவும், பின்னர் ஏற்கனவே தான் பழகிய பிரதீஸ்ராஜ், கலைசெல்வன் மூலமாக நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுரைக்கு சென்று செல்லாத நோட்டுகளை புதுநோட்டுகளாக மாற்ற முயற்சித்ததும் தெரிய வந்தது.

தண்டபாணி போலீசில் தெரிவிப்பது உண்மையா? அல்லது இந்த செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story