இயற்கையை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது அவசியம்; கலெக்டர் கதிரவன் பேச்சு
இயற்கையை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது அவசியம் என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறினார்.
ஈரோடு,
தமிழக அரசு அறிவித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவுபடி பிளாஸ்டிக் பைகள், சாப்பாடு மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் காகிதம், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் ஸ்டிரா உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதற்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மர இலை, காகித விரிப்பு, கண்ணாடி, உலோக டம்ளர்கள், காகித ஸ்டிரா, துணி, காகித, சணல் பைகள் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு சம்பத்நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மலையாண்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நமது வாழ்க்கை முறையில் கலாசார மாற்றத்திற்காகவும், எளிமையான முறையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்தப்பட்டது. வனப்பகுதி வழியாக செல்லும்போது குரங்கு போன்ற உயிரினங்களுக்கு சிலர் உணவை கொடுத்து பழக்கிவிட்டு உள்ளனர். அதில் பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து கொடுக்கிறார்கள். எனவே இயற்கையை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது அவசியம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூக்கடைகளில் வாழை இலையில் பூக்கள் வழங்கப்படும். காலபோக்கில் பூக்கள் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்பட்டது. பூக்களை தொடுப்பது கூட வாழை நார்களை பயன்படுத்தினர். தற்போது அதற்கு பதிலாக நூல் பயன்படுத்தப்படுகிறது. கோவில் திருவிழாக்களில் அன்னதானத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து இயற்கையான பொருட்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும். அதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
கண்காட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘‘பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு’’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.