அவினாசியில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் துணை போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம், மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மனு


அவினாசியில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் துணை போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம், மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மனு
x
தினத்தந்தி 1 Jan 2019 5:48 AM IST (Updated: 1 Jan 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் துணை போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அனுப்பட்டி முருக பக்தர்கள் பேரவையினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– அறுபடை வீடுகளில் 3–ம் படை வீடான பழனிக்கு தைப்பூசத்தன்று திருப்பூர் மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர். பாதயாத்திரை செல்வதற்கு பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், தார் ரோட்டில் பக்தர்கள் செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படுகிறது.

ரோட்டின் ஓரங்களில் பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கு வசதியாக சுத்தப்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவும், சுகாதார வளாகம் மற்றும் தங்குவதற்கு சத்திரங்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கொடுத்த மனுவில் ‘‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை கடைகளில் உள்ள மளிகை பொருட்களை தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

உணவகங்கள் மற்றும் பேக்கரியில் பிளாஸ்டிக் பைகளை வாங்கி பதுக்கி வைத்து வருகிறார்கள். எனவே தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

வெள்ளிரவெளி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘வெள்ளிரவெளி கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் நிலவியல் வண்டிப்பாதை ரோடு உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த வண்டிப்பாதை வழியாக வடுகபாளையம் ஊருக்கு உட்பட்ட வயக்காடு பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு தார்ச்சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் கொடுத்த மனுவில் ‘‘ காசிபாளையம் 34–வது வார்டு சாரதா டையிங் (மேட்டுவலவு) பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து கொண்டிருக்கிறார்கள். அப்பகுதி மக்களிடம் ரோடு வருவதாக கூறி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள், மாற்று இடத்துடன் கூடிய வீடு தருவதாக கூறினார்கள். அதன் பின்னர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு வந்ததாக கூறி டோக்கன் கொடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது வீடு வந்த அனைவரும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் தருமாறு கூறி நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். அந்த நோட்டீசில் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் கோவை கோட்டத்திற்கு செலுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த தொகையை எங்களால் செலுத்த இயலாது. நாங்கள் கூலித்தொழிலாளிகள். எனவே இந்த தொகையை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். கருப்பு துணியால் கண்ணை கட்டியும், நாமம் போட்ட படியும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் கொடுத்த மனுவில் ‘‘ திருப்பூர் மாநகராட்சி குடியிருப்பு காலனிதாராபுரம் சாலை பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் துப்புரவு பணி செய்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு 100 ஆண்டுகள் கடந்தும் வீட்டுமனை பட்டா இல்லை. எனவே அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’’ என்று கூறி இருந்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கொடுத்த மனுவில் ‘‘ அவினாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளில் போலீசார் ஒருதலைபட்சமாக நடப்பதன் காரணமாக அவினாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாதி ரீதியான மோதல்கள் மற்றும் கலவரங்கள் உருவாக போலீசாரின் முறையற்ற விசாரணை மற்றும் அவர்கள் வழக்குகளில் கையாளும் முறையே காரணம் ஆகும். அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி பிரச்சினைகள் அனைத்திற்கும் மூல காரணமாக இருந்து வருகிறார். காணூர் பகுதியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவரை, மற்றொரு சாதியினர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்நோக்கத்துடன் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். எனவே இதில் உண்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். முறையாக விசாரணை நடத்தாமல் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று அதில் கூறி இருந்தனர்.


Next Story