ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்


ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 1 Jan 2019 4:53 PM GMT)

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி,


2018–ம் ஆண்டு முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 2019–ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி திருச்சியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டு பிறப்பை இளைஞர்கள், பொதுமக்கள் பலர் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.


இதேபோல மலைக்கோட்டை மாணிக்க விநாயகர், தாயுமானவர் கோவில், உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், வயலூர் முருகன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், ஜங்‌ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில், உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாத சாமி கோவில், உறையூர் பஞ்சவர்ண சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கோவில்கள் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


புத்தாண்டு தினத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்தவண்ணம் இருந்தனர். அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்த பக்தர்களும் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கட்டண வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மேலும், நெய் தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலின் முன்பு தீபம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் அம்மனை வணங்கினர்.

சில பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து தரிசனம் செய்தனர்.

 இதேபோல இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் ஆகிய அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story