ஈரோட்டில் பரபரப்பு எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது


ஈரோட்டில் பரபரப்பு எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது
x
தினத்தந்தி 2 Jan 2019 3:30 AM IST (Updated: 2 Jan 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு சத்தி ரோடு பழனிமலை வீதியில் உள்ள ஒரு தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் ஹவாலா பண பரிவர்த்தனை நடைபெறுவதாக, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்து.

இதைத்தொடர்ந்து சக்தி கணேசன் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ஈரோடு டவுன் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட எலக்ட்ரிக்கல் கடைக்கு விரைந்து சென்று ‘திடீர்’ சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் ரூ.20 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் கடை ஊழியரான பாலாஜி (வயது 40) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கடையின் உரிமையாளர் பிரேம்நாத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடையில் இருந்த பணத்திற்கு அவர் உரிய கணக்கு காட்டவில்லை. தொடர்ந்து நடந்த விசாரணையில், ரூ.20 லட்சமும் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது.

மேலும் இந்த ஹவாலா பணத்தை டெல்லியில் உள்ள ஒருவருக்கு வழங்குவதற்காக இங்குள்ள முக்கிய புள்ளி ஒருவர் வழங்கி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் ஈரோடு மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுபோன்று வேறு யாருக்காவது ஹவாலா பணம் வழங்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து கடை ஊழியர் மற்றும் உரிமையாளரிடம் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

எலக்ட்ரிக் கடையில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது ஈரோட்டில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story